நலம் தரும் நடராசர் தரிசனம்
வைகைக் கரை வாதவூரில், அந்தணர் குலத்தில் சம்புபாத சரிதர்} சிவஞானவதிக்கு மகனாகப் பிறந்தார் வாதவூரர். இவர் கல்வியில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரானார். புலமை மிக்கவருக்கு "தென்னவன் பிரமராயன்' எனும் பட்டமும் கிடைத்தது.
"நில்லாவுலகில் சிவன் திருவடி இன்பமே உண்மை' என வாதவூரருக்கு தோன்ற, கல்வி, கேள்விகளால் காண முடியாது என அவர் உணர்ந்து ஞானம் தேடி பயணித்தார்.
ஒருமுறை மன்னன் சொன்னபடி வாதவூரர் அரசுக்கு குதிரைகளை வாங்கி வர திருப்பெருந்துறைக்குச் சென்றார். அவரை ஆட்கொள்ள விரும்பிய சிவன், அந்தணர் வடிவத்தோடு அடியவர்களுடன் கோயிலுக்கு அருகே குருந்த மரத்தடியில் எழுந்தருளினார். அவரை வேண்டவே, ஆண்டவனும் அருள்கண்ணால் ஞானோபதேசம் செய்தார். உடன் பெருமானை வலம்வந்து பணிந்து, கோவண உடை தரித்தார். தன் உணர்வில்லாமல் இறைவனைப் பாடும் திறன் உண்டாகி, அவரும் பாடினார். மகிழ்ந்த இறைவன் "மாணிக்கவாசகன்' என்னும் திருநாமத்தைத் தந்து திருப்பெருந்துறையில் திருப்பணி செய்ய கட்டளையிட்டார்.
அரசுப் பொருளால் திருப்பணி நடைபெற குதிரைகள் வராததைக் கண்ட பாண்டியன் ஓலை அனுப்ப, வாதவூரர் இறைவனிடத்தில் முறையிட்டார். சிவனோ, ""கனவில் நாம் குதிரைகளுடன் வருகிறோம். நீ முன்னர் சென்று, ஆவணி மூலநாளில் குதிரைகள் வரும் என கூறு'' என்றார். வாதவூரரும் அவ்வாறே செய்தார். மன்னன் தனது ஒற்றர்களை அனுப்பி விசாரிக்க, "எங்கும் குதிரைகள் இல்லை' என தெரிந்தது. சினம் கொண்ட மன்னன், வாதவூரரை சிறையில் அடைத்தார்.
ஓடிய நரிகள் குதிரைகளாகின. சிவ கணங்கள் குதிரை சேவகர்களாகின. சிவனே குதிரை வியாபாரியாகி, வெள்ளைக் குதிரையில் மதுரையை நோக்கி விரைந்தார். குதிரைக் கூட்டம் வந்தவுடன் வாதவூரரைச் சிறையிலிருந்து விடுவித்தார் மன்னர். அரண்மனை சேவகர்களோ குதிரைகளை லாயத்தில் கட்டினர்.
இரவில் குதிரைகள் நரிகளாகவே மாறி, ஊளையிட்டுக் கொண்டு ஓடின. பாண்டியன் சினம் கொண்டு வாதவூரரை மீண்டும் சிறையில் அடைத்தார். சிவனும் திருவிளையாடலின் அடுத்தநிலையாக, வைகையில் வெள்ளம் பெருகச் செய்தார்.
பாண்டியனும் வாதவூரரை விடுவித்து, வெள்ளம் மதுரையை அழிக்காமல் காப்பாற்றுமாறு வேண்டினார். வாதவூரரும் இறைவனை வேண்ட வெள்ளத்தின் வேகம் குறைந்தது.
பாண்டியனும் மக்களைக் கூட்டி பங்கு அளந்துகொடுத்து ஆற்றின் கரையை அடைக்குமாறு கூறினான். பிட்டு விற்கும் மூதாட்டிக்கு கூலியாளாக வந்த இறைவன் வேலை செய்யாமல் கிடக்க மன்னவன் பிரம்பால் அடிக்க, கூலியாளாக வந்த பெருமான் ஒருகூடை மண்ணை உடைப்பில் கொட்ட வெள்ளம் நின்றது. பாண்டியன் அடித்த பிரம்படியானது, அனைத்து உயிர்களின் மீதும் பட்டது. வாதவூரர் இறைவன் தன் அடியவர் பொருட்டு வேலையாளாக வந்ததை எண்ணி வியக்க, பாண்டியனும் வருந்தி வேண்டினார்.
வாதவூரர் தவக் கோலம் கொண்டு திருப்பெருந்துறையில் திருப்பணி மேற்கொண்டு முடித்து, சிவத் தலங்களை வழிபட்டார். சிதம்பரம் சென்று வணங்கி, ஏராளமான பாமாலைகள் பரமனுக்குப் சூட்டி வந்தார். அப்போது ஈழத்து பெüத்த
மன்னன் வேண்டியபடி பேசாத அவனது மகளையும் பேசச் செய்து, அற்புதம் புரிந்தார். சிதம்பரத்தில் தில்லை எம்பெருமான் வேதியராய் தோன்றி, திருவாசகம் அருளுமாறு கேட்டார். வாதவூரார் பாடல் சொல்ல, அம்பலவாணர் தம் திருக்கரத்தால் ஏட்டில் எழுதி, வாதவூரர் சொல்லிய இந்தத் திருவாசகம் பொன்னம்பலத்திலே நடனமாடுகின்ற அழகிய திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்தாகும் என்று கையொப்பமிட்டு சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து அற்புதம் புரிந்தார்.
மறுநாள் ஊராரும் தில்லைவாழ் அந்தணரும் அதைப் பார்த்து வாதவூரரிடம் விவரம் கேட்க, "இறைவனே திருவாசகம் சொல்லச் சொல்ல எழுதினார்' என விளக்கினார்.
திருவண்ணாமலையில் மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு முன் பத்து நாள்களில், கன்னிப் பெண்கள் விடியற்காலை எழுந்து வீடுகள்தோறும் சென்று, ஒருவரையொருவர் துயிலெழுப்பிச் சென்று, நீராடி வழிபட்டபோது அவர்கள் வாய்மொழியாகவே திருவெம்பாவையையும், அம்மானையாடும் காட்சியைக் கண்டு, அவர்கள் பாடுவதாக வைத்து, திருவம்மானையையும் அருளினார் மாணிக்கவாசகர். அவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்' என அழைக்கப்படுகின்றன.
32 ஆண்டுகளே வாழ்ந்து, ஆனி மகத்தில் சிதம்பரத்தில், சாயுச்சிய முக்தி அடைந்து, சிவனடி சேர்ந்தார்.
மார்கழி மாதத்தில் ஆருத்ராவுக்கு முன்பு 10 தினங்கள் மாணிக்கவாசகர் உற்சவம் கொண்டாடப்படுகிறது. "ஆருத்ரா தரிசனம்' என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள் திருவாதிரை. நடராஜர் தரிசனம் காண நலங்கள் வந்து சேரும். இந்த ஆண்டு ஜனவரி 13}இல் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.