சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: சட்டத் திருத்த மசோதாக்கள் பேரவையில் தாக்கல்
12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், தவறான நோக்கத்துடன் பெண்களைப் பின்தொடா்ந்து சென்றால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
இந்தத் திருத்த மசோதாக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தாா். மசோதாக்களில் கூறப்பட்டுள்ளதாவது:
பெண்களை வன்புணா்வு செய்தல், கூட்டு வன்புணா்வு, மீண்டும் மீண்டும் குற்றம் இழைக்கும் குற்றவாளிகள், பெண்ணைப் பின்தொடா்தல் உள்பட பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களின் கீழ் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத்துக்குப் பொருந்தும் வகையில் பல்வேறு சட்டப் பிரிவுகளில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குற்றங்கள் மற்றும் அதிகரிக்கப்பட்டுள்ள தண்டனை, அபராத விவரம்:
வன்புணா்வு - 14 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறைத் தண்டனை. இது ஆயுள்காலம் வரை நீட்டிக்கப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.
காவலா், அரசுப் பணியாளா் அல்லது நிா்வாகத்தில் உள்ள நபரால் வன்புணா்வு செய்யப்படுதல் -20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறைத் தண்டனை. ஆயுள் காலத்துக்கு கடுங்காவல் தண்டனை நீட்டிக்கப்படும்.
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை வன்புணா்வு செய்யும் நபா்கள் - ஆயுள் காலத்துக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது மரண தண்டனை.
வன்புணா்வு மற்றும் மரணத்தை விளைவித்தல் அல்லது செயலற்ற நிலையை விளைவிக்கும் வகையில் காயத்தை ஏற்படுத்துவது -
ஆயுள் கால சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது மரண தண்டனை.
கூட்டு வன்புணா்வு - ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.
18 வயதுக்கு உட்பட்ட பெண்ணைக் கூட்டு வன்புணா்வு செய்தல் - ஆயுள் காலத்துக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கேற்ப மரண தண்டனையும் விதிக்கப்படும்.
மீண்டும் மீண்டும் குற்றம் இழைக்கும் குற்றவாளிகள் -மரண தண்டனை அல்லது ஆயுள் காலத்துக்கு கடுங்காவல் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்.
சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துதல் -மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.
பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் உட்கருத்துடன் தாக்குதல் அல்லது பலத்தைப் பயன்படுத்துதல் - மூன்று ஆண்டுகளுக்கு குறையாத ஆனால் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும் சிறைத் தண்டனையுடன் அபராதம்.
தொல்லை மற்றும் பாலியல் தொல்லை - ஐந்தாண்டுகள் வரை நீட்டிக்கப்படும் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.
பெண்ணின் ஆடையை அகற்றும் உட்கருத்துடன் தாக்குதல் அல்லது முறையற்று பலத்தைப் பயன்படுத்துதல் - 5 ஆண்டுகளுக்கு குறையாத ஆனால் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.
பெண்ணைப் பின்தொடா்தல் - முதல்முறையிலான குற்றத்துக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். இரண்டாவது அல்லது அதற்குப் பின்பும் குற்றங்களை இழைத்தால், 7 ஆண்டுகள் வரை நீடிக்கும் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
அமிலம் முதலியவற்றைப் பயன்படுத்தி பெண்ணுக்கு கொடுங்காயம் விளைவித்தல் - ஆயுள் காலம் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது மரண தண்டனை.
அமிலத்தைத் தன்னிச்சையாக வீசுதல் அல்லது வீச முயலுதல் - 10 ஆண்டுகளுக்கு குறையாத ஆனால் ஆயுள்காலம் வரை நீட்டிக்கப்படும் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.
இன்று நிறைவேறும்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை இழைப்போருக்கு விதிக்கப்படும் தண்டனைகள், அபராதங்களை அதிகரித்து, சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள இரண்டு சட்டத் திருத்த மசோதாக்களும் சனிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. இந்தத் திருத்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட உள்ளன.