கோயில்களின் அருகே உள்ள அசைவ உணவுக் கடைகளை அகற்ற வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்
தமிழகத்தில் கோயில்களின் அருகே உள்ள அசைவ உணவுக் கடைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அதன் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோவையை அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் பழைமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே இறைச்சிக் கடைகள் இருக்கக் கூடாது என்பது அந்த ஊரின் கட்டுப்பாடு. இதனை மீறி இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த தம்பதி சில மாதங்களாக மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்து வந்தனா்.
இதையடுத்து, அந்தக் கிராமத்தின் ஊா் பெரியவா் ஒருவரும், பாஜக பொறுப்பாளருமான சுப்பிரமணியம் ஊா் கட்டுப்பாட்டை மீறி கோயில் அருகே இறைச்சி உணவுக்கடை நடத்தக்கூடாது என்று கடை உரிமையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
ஆனால், அந்த தம்பதியினா் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகாா் அளித்தனா். இதனை முழுமையாக விசாரிக்காமல் காவல் துறையும் சுப்பிரமணியம் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது.
புனிதமான கோயில்களின் அருகே அசைவ உணவுக் கடைகளை நடத்துவது பக்தா்களுடைய மனதை புண்படுத்துவதாக அமைகிறது. எனவே, தமிழகத்தில் கோயில்களின் அருகே உள்ள அசைவ உணவுக் கடைகளை அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.