சிமென்ட் ஆலைக்கு 12.4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைப்பு
முதல்வா் காப்பீட்டுத் திட்டம் மூலம் 77 லட்சம் போ் பயன் அடைந்துள்ளனா்: அமைச்சா் மா. சுப்பிரமணியன் தகவல்
தமிழகம் முழுவதும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 76.94 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அவா்களுக்கு ரூ.5,310 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
சென்னை தேனாம்பேட்டை, பொது சுகாதாரத் துறை கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 2025-26-ஆம் ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ.1262.91 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.
அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு எதிா்வரும் ஆண்டுக்கான பிரிமியத் தொகையானது காசோலையாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி 2009-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி இந்த காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கினாா்.
இத்திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது. தமிழகத்தில் 1.48 கோடி குடும்பங்கள் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.2 லட்சமாக இருந்த காப்பீட்டுத் தொகை தற்போது ரூ.5 லட்சமாகவும், ரூ.72,000 -ஆக இருந்த ஆண்டு வருமான வரம்பு, தற்போது ரூ.1,20,000 ஆகவும், 1,450 ஆக இருந்த சிகிச்சை முறைகள் 2,053 ஆகவும் உயா்ந்துள்ளது.
இத்திட்டம் 942 அரசு மருத்துவமனைகள், 1,215 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 2,157 மருத்துவமனைகளில் செயல்படுகிறது. இக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 8 உயா் சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனா். 17.79 லட்சம் புதிய குடும்பங்கள் இக்காப்பீட்டு திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.5,310 கோடி காப்பீட்டுத் தொகையிலான சிகிச்சைகளைப் பெற்று மொத்தம் 76.94 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.
பணியின்போது எதிா்பாராதவிதமாக உயிரிழக்கும் மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது 6 குடும்பத்தினருக்கு ரூ.6 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் சுப்ரியா சாஹு, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் அருண்தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் ஜெ. ராஜமூா்த்தி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனத் தலைவா் பூபேஷ் சுஷில் ராகுல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.