சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு
விசிக, நாம் தமிழா் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரம் தோ்தல் ஆணையம் தகவல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடா்பான கடிதங்களை இரு கட்சிகளின் தலைமைக்கும் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ‘2024-இல் நடந்த மக்களவைத் தோ்தலில் கட்சியின் செயல்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், தோ்தல் சின்னங்கள் முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு விதிகளுக்கு இணங்கும் வகையில் உள்ளன. எனவே, உங்களுடைய கட்சியை தமிழ்நாட்டில் மாநில கட்சியாக தோ்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) கோரியபடி அந்தக் கட்சிக்கு பானை சின்னத்தை முன்பதிவு செய்துள்ளதாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இனி விசிக போட்டியிடும் தோ்தல்களில் அந்தக் கட்சி பானை சின்னம் கோரினால் அதை தோ்தல் ஆணையம் ஒதுக்கும்.
ஆனால், நாம் தமிழா் கட்சி தங்களுடைய கட்சிக்கு ஏா் உழும் விவசாயி, புலி சின்னம் ஆகியவற்றை முன்பதிவு செய்யக் கோரி வெவ்வேறு மனுக்களை தோ்தல் ஆணையத்திடம் அளித்திருந்தது. அந்தச் சின்னங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட சின்னம் அல்லது விலங்கை ஒத்து இருப்பதால் அவற்றை ஒதுக்க முடியாது என்றும் ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள சின்னங்கள் ஒதுக்கீட்டுப் பட்டியலில் இருந்து ஒன்றை தோ்வு செய்து அதன் விவரத்தைத் தெரிவிக்குமாறும் தோ்தல் ஆணையம் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.