டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்
பக்திமயமான மார்கழி மாதம்
தமிழ் மாதங்களில் புனிதமானதும் தெய்விகச் சிறப்பு வாய்ந்த மாதமாகவும் "மார்கழி' விளங்குகிறது.
"திருப்பாவை', "திவ்விய பிரபந்தம்' பாசுரங்களால் திருமாலை வைணவர்களும், மாணிக்கவாசகர் அருளிய "திருவெம்பாவை', "திருப்பள்ளிஎழுச்சி' பாடல்களை சைவர்களும் போற்றிப் பாடுகின்றனர். பகவத் கீதையில் கண்ணன் மாதங்களில் "மார்கழியாகவும்", நாள்களில் "திருவாதிரையாகவும்' விளங்குகின்றேன்' என எடுத்துரைக்கிறார்.
உலகப் பொது நலம் கருதியும், மழை பெய்ய வேண்டியும், விரும்பிய கணவனை அடையவும், கன்னிகள் விடியற்காலையில் நீராடி இறைவனை வழிபடுவார்கள். "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!' எனும் திருப்பாவை பாடல், பாவை நோன்பின் சிறப்பைக் கூறுகிறது.
ஆடிப்பூரத்தில் அவதரித்த கோதை. திருமாலையே என்பதில் உறுதியாக பெருமாளுக்கு என பெரியாழ்வார் தொடுத்து வைத்த மாலையை அணிந்து மகிழ்கிறாள். "ஆண்டாள் சூடி மகிழ்ந்த மாலையே தனக்கு விருப்பம்' எனக் கூற, ஆண்டாள் "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றும் இறைவனை தனது அன்பால் பக்தியால் ஆட்கொண்டதால் "ஆண்டாள்' எனவும் அழைக்கப்படுகிறாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டருளும் அரங்கனுடன் ஒன்றிய வரலாறு நாம் அறிந்ததாகும்.
ஸ்ரீரங்கம் கோயிலில் இராமானுசர் சந்நிதியில் ஆண்டாளின் வரலாறு அழகிய ஓவியமாக, நாயக்க மன்னர்கள் காலத்தில் தீட்டப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் திருவிழா "திருமொழித் திருநாள்', "திருவாய்மொழித் திருநாள்' (பகல் பத்து இராப்பத்து) என்றபடி அழைக்கப்படுகிறது. இந்நாள்களில் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் அரையர்களால் அபிநயத்துடன் பாடப் பெற்று அற்புத "தெய்வத் தமிழ் விழா' வாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கத்துப் பெருமாளைப் போற்றி ஆழ்வார்களால் 247 பாசுரங்கள் அருளப் பெற்றுள்ளன. அதிகப் பாடல்களால் போற்றி மகிழ்ந்தவர் திருமங்கை ஆழ்வார் அருளிய "திருநெடுந்தாண்டகம்' வைகுண்ட ஏகாதசித் திருவிழாவின் முதல் நாளும், "அமலன் ஆதிபிரான்' என்று அரங்கன் அழகைப் போற்றிய திருப்பாணாழ்வார் பாசுரம் ஐந்தாம் நாளும் அருளப்படுகிறது.
வைணவக் கோயில்களில் திருப்பாவை, திருவாய்மொழி, திருநெடுந்தாண்டகம், திருப்பள்ளியெழுச்சி போன்ற பாசுரங்கள் தொன்றுதொட்டு பாடப்பட்டு வருவதையும் அதற்கு நிவந்தங்கள் அளித்தது பற்றியும் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. ஸ்ரீரங்கம், திருமால்புரம், உத்திரமேரூர், எண்ணாயிரம் போன்ற பல கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளின் மூலம் திவ்விய பிரபந்தங்கள் பாடப்பட்டு வந்ததை நம்மால் அறிய முடிகிறது.
சிவனுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. "ஆதிரை நன்னாளான்', "ஆதிரைநாள் உகந்தார்' எனப் போற்றுகின்றனர் அடியார்கள். திருவாதிரைத் திருநாளில் சிவ வழிபாடு செய்வதையும் சிவனடியார்களுக்கு அமுது அளித்தலையும் கடமையாகக் கொண்டிருந்தனர் எனப் பெரியபுராணப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
திருவாதிரையின்போது ஆடவல்லான் ஆகிய நடராஜருக்கு சிறப்பான அபிசேக வழிபாடுகள் நடைபெறுகின்றன. "கனகசபை" எனப்படும் சிதம்பரத்தில் இறைவன் தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்கி ஆடியது "ஆனந்த நடனம்' ஆகும். திருவாதிரை நாளில் நடைபெறும் சிறப்பான வழிபாடு, அபிஷேகத்தை "ஆருத்ரா தரிசனம்" என அழைக்கிறோம்.
மயிலாப்பூர் கோயிலில் நடைபெற்ற "ஆதிரை நாள் விழா' பற்றிய சிறப்பை ஞானசம்பந்தர் பதிகம் மூலமாகவும், , திருவாரூர் திருத்தல ஆதிரை நாள் விழா பற்றி நாவுக்கரசர் பதிகம் மூலமாகவும் அறிகிறோம்.
திருமழபாடி, திருவாரூர், திருக்கோடிக்காவல், திருப்பனந்தாள், பழையாறை, சோழமாதேவி, திருவிடைவாசல், திருவொற்றியூர் போன்ற கோயில்களில் திருவாதிரை விழா சிறப்பாக நடைபெற்றுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அகரம் என்ற ஊரில் உள்ள கோயிலில் "ஆதிரை விடங்கர்' என்ற திருமேனி செய்து அளிக்கப்பட்டுள்ளதும், அரியலூர் அருகே உள்ள காமரசவல்லி கோயிலில் இறைவனுக்கு அக்கார அடிசல் அமுது படைக்கவும், சாக்கைக் கூத்து ஆடவும் முதலாம் இராசராச சோழனால் தானமளிக்கப்பட்டதையும் கல்வெட்டுகளில் அறிய முடிகிறது. குடந்தை அருகே உள்ள திருக்கோடிக்காவல் கோயிலில் திருவாதிரை நாளில் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்ட நடராசர் திருமேனி "கொட்டமைந்த ஆடலார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
}கி. ஸ்ரீதரன், (தொல்லியல் துறை } பணி நிறைவு).