டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்
நினைத்தாலே முக்தி..
திருமாலும் பிரம்மாவும் தங்களில் யார் உயர்ந்தவர் என்பதை அறிய சிவனிடம் செல்கின்றனர். தனது முடியையும் திருவடியையும் யார் காண்கிறார்களோ அவர்களே உயர்ந்தவர் என்று கூறி, ஜோதி வடிவாக இறைவன் காட்சி தருகிறார்.
திருமால் பன்றி வடிவம் எடுத்து நிலத்தை அகழ்ந்து திருவடியைக் காணவும், பிரம்மா அன்னப்பறவை வடிவம் கொண்டு முடியைக் காணவும் செல்கின்றனர். அவற்றை காண முடியாமல் இருவரும் தோல்வியை ஏற்று, சிவனை வணங்குகின்றனர். கோயில்களில் கருவறை பின்புறம் உள்ள தேவ கோட்டத்தில் இந்த வடிவைக் காணலாம். இதனை "அழலாகிய அண்ணல்', "தீ யுருவாகி நின்ற நிமலன்', "தேடிக்காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை',
"வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும்/ விளங்கிய நான்முகனும் / சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதியுளாகி நின்றாய்'/ என்றெல்லாம் திருமுறைகள் போற்றுகின்றன. இங்கே இறைவன் ஒளிவடிவமாகக் காட்சி தந்த மலையே இறைவடிவாகப் போற்றப்படுகிறது. இம்மலை "அருணாசலம்', "அருணை', "சோணாசலம்' என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. "அருணாசலம்' என்றால் "அருள் வழங்கும் மலை' என்பது பொருளாகும். ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்களில் இத்தலத்தின் பெருமை பேசப்படுகிறது.
திருவாரூரில் பிறந்தவர்களும், காசியில் இறந்தவர்களும், சிதம்பரத்தை தரிசித்தவர்களும் முக்தி அடைவார்கள் என்கின்றனர். திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் பெருமை உடையது. பல ஞானிகள் வந்து தங்கி இறையருள் பெற்ற புனித பூமி.
"திருவெம்பாவை' பாடல்களை மாணிக்கவாசகர் இயற்றிய தலமாகவும், முருகன் அருளை அருணகிரிநாதர் பெற்று திருப்புகழ் பாடிய புகழுடைய தலமாகவும் விளங்குகிறது.
இங்கு மலையே இறைவனின் வடிவமாக இருப்பதால், மலையைச்சுற்றி கிரிவலம் வருவது சிறப்பாகும். கிரிவலப் பாதையில் இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய அஷ்டலிங்கக் கோயில்கள் உள்ளன. கிரிவலம் வர ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் சிறப்பானதாகும். உகந்த நாள்களாக சித்திரை முதல் நாள், மாசி சிவராத்திரி, கார்த்திகை, பெüர்ணமி நாள்கள் சிறப்புடையதாகும்.
எந்தெந்த நாள்களில் கிரிவலம் வந்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா? ஞாயிறு } சிவபதம், திங்கள் } (பெüர்ணமி நாளாக இருந்தால் மேலும் சிறப்பு) இறை அருள், செவ்வாய் } எண்ணிய எண்ணம் நிறைவேறும், புதன் } அறிவுக்கூர்மை, வியாழன்- நல்ல வளமும் எண்ணமும் பெறுதல், வெள்ளி } அன்பும் இன்பமும் நிகழும், சனிக்கிழமை } நவக்கிரகங்களை வழிபட்ட பலன் ஆகியனவாகும்.
திருவண்ணாமலை கோயிலை சோழ, பாண்டிய, போசள, விஜயநகர } நாயக்க மன்னர்கள், பிற்கால பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் ஆகிய மன்னர்கள் போற்றியுள்ளனர்.
இக்கோயிலுக்கு நகரத்தார் செய்துள்ள பணிகள் மகத்தானது.
இறைவன் "திருவண்ணாமலை மகாதேவர்', "திருவண்ணாமலை ஆண்டார்', "திருவண்ணாமலை ஆழ்வார்' எனவும் அம்பாள் "உண்ணாமுலை நாச்சியார்' எனவும் "திருக்காமக் கோட்ட நம்பிராட்டியார்' என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாமலை கோயிலின் கிழக்கு கோபுரத்தை தஞ்சையை ஆண்ட செவப்ப நாயக்கர் காலத்தில் (1572) சிவநேசன், லோகநாதன் என்ற இரு சகோதரர்கள் கட்டிமுடித்தார்கள் என கல்வெட்டு குறிப்பிடுகிறது. இப்பாடலை எல்லப்ப நயினார் என்ற புலவர் பாடிய பாடலால் அறிய முடிகிறது. கோபுர நுழைவு வாயிலின் பக்கச் சுவரில் இருவரது உருவங்களும் கைத் தொழும் நிலையில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிற்பிகளாக இருக்க வேண்டும். ஒருவர் கையில் முழக்கோல் உள்ளது. இதனை "திருவண்ணாமலை முழம்" எனக் கூறுவர்.
கார்த்திகை பௌர்ணமி நாளில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பானது. இறைவன் "ஜோதி வடிவாகக் காட்சி அளித்ததை எடுத்துரைக்கும் அன்று தீபம் மலை உச்சியில் ஏற்றப்படும். சைவ எல்லப்ப நாவலர் அருளிய அருணாசலப்புராணத்தில், "தீப தரிசனம் கண்டால் பசிப் பிணி இல்லாது இடையூறுகள் நீங்கும்' என்றும், புராணிகர் சோனாசல முதலியார் அருளிய "கார்த்திகைத்தீப வெண்பா" என்ற இலக்கியத்தில், "அன்னம் அளிக்கும் தீபம்', "சிந்தை தெளிவிக்கும் தீபம்', "வினையைப் போக்கும் தீபம்' என்றும், சிவப்பிரகாச சுவாமிகள் "தீபத்தை வழிபட்டவர்களுக்கு அகத்திருள் அகலும்' என்றும் கூறுகின்றனர்.
துன்பங்கள் அகலவும், வாழ்க்கை ஒளிமயமாக விளங்கவும் இல்லங்களிலும் கோயில்களிலும் தீபம் ஏற்றுவோம்.
கி. ஸ்ரீதரன்,
(தொல்லியல் துறை } பணி நிறைவு).