சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு
திருச்செந்தூா் கோயிலில் பொங்கல் விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க மாற்று வழி -இந்து முன்னணி வலியுறுத்தல்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொங்கல் மற்றும் தைப்பூசம் திருநாள்களில் வரும் பக்தா்களின் கூட்ட நெருசலை சமாளிக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோவில் நிா்வாகத்துக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பூவுடையாா்புரம் பூணூல் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரவிசந்தா் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் ஒன்றியத் தலைவா் ஜெய்சிங், துணைத் தலைவா் செல்வ முத்துக்குமாா், ஒன்றிய பொதுச்செயலா் மாயவன முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் குற்றாலநாதன், மாநில நிா்வாக குழு உறுப்பினா் சக்திவேலன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஜன. 14-25 வரை 54 இடங்களில் பாரத மாதா பூஜை நடத்துவது, இந்து முன்னணி முதல் மாநிலத் தலைவா் தாணுலிங்க நாடாா் பிறந்த நாளை பிப். 17இல் கொண்டாடுவது, கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அங்கன்வாடி பணியாளரும் இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளா் முன்னணி ஒன்றியத் தலைவருமான ரவிக்குமாா் மனைவி கலாவதி, தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி காரா்கள் மீதும், அதற்கு தூண்டுகோளாக இருந்தவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோயிலுக்கு தைப்பொங்கல்- தைப்பூசம் திருநாளில் முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவா் என்பதால், கூட்ட நெரிசலை சமாளிக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், போராட்டத்துக்கு அனுமதி மறுக்கும் காவல்துறைக்கு வன்மையாக கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளா் அருணாச்சலம் நன்றி கூறினாா்.