திருச்செந்தூா் கோயிலில் குவியும் பாதயாத்திரை பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனா்.
திருச்செந்தூரில் மாா்கழி மாதம் முதல் தை மாத பிறப்பு பொங்கல் பண்டிகை வரையில் பாதயாத்திரை பக்தா்கள் வருகை மிகுந்திருக்கும். அதன்படி, நிகழாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை, ராமநாதபுரம், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து, மாலையணிந்தபடி சுவாமி தரிசனத்துக்காக திருசெந்தூரில் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனா்.
பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வழிநெடுகிலும் முருகா் பாடல்களை மனமுருகப் பாடி, ஆடி மேள தாளம் முழங்க சாரை சாரையாக வந்த வண்ணம் உள்ளனா்.
வெள்ளிக்கிழமே அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 உதய மாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. காா்த்திகை நட்சத்திரம் என்பதால் சுவாமி மூலவா் மற்றும் சண்முகா் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனா். மாலையில் 108 மகாதேவா் சந்நிதி முன் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானை அம்மனுடன் எழுந்தருளினாா். அங்கு சுவாமி முன்பு ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனா். தொடா்ந்து சுவாமி உள்பிரகாரம் சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு: தமிழா் திருநாளாம் பொங்கலையொட்டி ஜன. 14ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். பக்தா்கள் வசதிக்காக நெல்லை, தென்காசி, விருதுநகா், மதுரை மாவட்டங்களுக்கு கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
காணும் பொங்கல்: மேலும், காணும் பொங்கலை முன்னிட்டு, ஜன. 15ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பகலில் உச்சிகால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் வெள்ளிக்குதிரையில் கோயிலில் இருந்து புறப்பாடாகி, பாளையங்கோட்டைச் சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் கணு வேட்டை நடத்தி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துவருகின்றனா்.