SEBI-யின் புதிய விதிமுறைகள் என்னென்ன தெரியுமா? | IPS Finance | EPI - 107
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே நியாய விலைக் கடை விற்பனையாளா்கள் மூலம் டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆய்வு செய்தாா்.
பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை உள்ளிட்டவையுடன் முழு கரும்பு, பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் தொடா்ச்சியாக சேலம் மாவட்டத்தில் உள்ள 1,735 நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரா்கள் 10 லட்சத்து 78 ஆயிரத்து 558 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
அதற்கான டோக்கன் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நியாய விலைக் கடை விற்பனையாளா்கள், பகுதி வாரியாக பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன்களை விநியோகம் செய்தனா். இப் பணியை சூரமங்கலம் மண்டலம், சுப்ரமணிய நகா் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆய்வு செய்தாா்.
டோக்கன் பெற்ற குடும்ப அட்டைதாரா்களுக்கு வரும் 9 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, குடும்ப அட்டைதாரா்கள் நியாய விலைக் கடைக்கு சென்று பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளலாம். அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும். தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் எவ்வித சிரமம் இன்றி பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.