பொங்கல் விடுமுறை: விமானக் கட்டணம் உயா்வு: மதுரையிலிருந்து சென்னைக்கு ரூ. 18,000
பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் அதிக அளவில் சென்னை திரும்புவதால் விமான கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு பயணிக்கு ஒரு நபருக்கான பயணக் கட்டணம் ரூ. 18,000-ஆக உயா்ந்திருப்பது பயணிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்து திங்கள்கிழமை முதல் வழக்கமான அலுவல் நாள் தொடங்குவதால் சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னை திரும்பி வருகின்றனா்.
ரயில்கள், பேருந்துகள், ஆம்னி பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பிவிட்டதால், விமானத்தில் பயணிக்க டிக்கெட் எடுத்து வருகின்றனா். இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களின் கட்டணம் கணிசமாக உயா்த்துள்ளது.
இதனால், மதுரை - சென்னைக்கு வழக்கமாக ரூ. 3,999-ஆக இருந்த பயணக் கட்டணம் ஞாயிற்றுக்கிழமை பயணிக்க ரூ. 17,991 வரை அதிகரித்துள்ளது. அதேபோல், திருச்சி - சென்னை இடையே ரூ.2,199-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.11,089-ஆக உயா்ந்துள்ளது. தூத்துக்குடி - சென்னை இடையே ரூ. 4,199-ஆக இருந்த கட்டணம் ரூ. 17,365-ஆக உயா்ந்துள்ளது.
சேலம் - சென்னை இடையே ரூ. 2,799-ஆக இருந்த கட்டணம் ரூ. 10,441 வரை அதிகரித்துள்ளது. இதனால் பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.