பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டம்: 3 போ் கைது
திருச்சி அருகே பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
துவாக்குடி வடக்குமலை சிவன் கோயில் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டுள்ளதாக துவாக்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, மேற்கண்ட பகுதியைச் சோ்ந்த ரவிபோஸ்கோ, ராமச்சந்திரன், அபேத்கா் தெருவைச் சோ்ந்த சந்தோஷ், லட்சுமணன், லோகேஷ் ஆகிய 5 போ் பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு அப்பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ரவிபோஸ்கோ (28), ராமச்சந்திரன் (21), லோகேஷ் (20) ஆகிய 3 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய சந்தோஷ், லட்சுமணன் இருவரையும் தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்து கத்திகளைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.