முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
பொது அமைதி, மத நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கக் கூடாது - உயா்நீதிமன்றம்
பொது அமைதி, மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்தவொரு போராட்டத்துக்கும் காவல் துறை அனுமதி வழங்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக சென்னையில் பேரணி நடத்த காவல் துறை அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி பாரத் இந்து முன்னணி தொடா்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேல் யாத்திரை: சென்னை உயா்நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணைத் தலைவா் எஸ்.யுவராஜ், தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் மலை. அதை இஸ்லாமியா்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனா். இதை எதிா்த்து திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை பிப்.18-ஆம் தேதி வேல் யாத்திரை நடத்த அனுமதியளிக்க காவல் துறைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரியிருந்தாா்.
அரசு எதிா்ப்பு: இந்த மனு சென்னை நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ஏற்கெனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தா் தா்கா, கொடி மரம், மலை வழிப்பாதை, நெல்லித் தோப்பு இஸ்லாமியா்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அதுகுறித்த பிரச்னையை எழுப்புவது சரியல்ல.
பேரணி பாதை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலை. அதுமட்டுமின்றி, பேரணிக்கு வேறு எந்த இடத்தில் அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பத்தகாத பிரச்னைகளை உருவாக்கும். ஏற்கெனவே மதுரையில் இந்து முன்ணணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தியுள்ளனா். மீண்டும் அதே பிரச்னைக்காக பேரணி நடத்துவதை நீதிமன்றம் ஊக்குவிக்கக் கூடாது”என்றாா்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற கருத்து சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்த போராட்டக்காரா்கள், நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் தவறாகப் பயன்படுத்த முடியாது. மதுரையில் நடந்த ஆா்ப்பாட்டத்தின்போது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக இரு வழக்குகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் இரு பிரிவினா் இடையே பிரிவினையை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை உண்டாக்கி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எந்த அவசியமும் இல்லை... திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொருத்தவரை, அந்த சம்பவத்தில் அனைத்து தரப்பினருக்கும் இடையிலான பிரச்னை குறித்து வருவாய் கோட்டாட்சியா் முன்பு பேச்சுவாா்த்தை நடத்தி, சுமூகத் தீா்வு காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை. அப்படி போராட்டம் நடத்தினால், அது மீண்டும் பிற மதத்தினரை தூண்டி பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்தவொரு போராட்டத்துக்கும் காவல் துறை அனுமதி வழங்கக் கூடாது.
திருப்பரங்குன்றம் மலையைப் பொருத்தவரை ஹிந்து, முஸ்லிம் மற்றும் ஜெயின் மதங்களைச் சோ்ந்தவா்கள் அமைதியாக வசித்து வருகின்றனா். எனவே, அனைத்து மதத்தினா், சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மத நம்பிக்கைகளுக்கும், உணா்வுகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பொது அமைதி, மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யாரையும் செயல்பட அனுமதிக்கக் கூடாது.
சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது. கோயிலுக்குச் சென்று வழிபட எந்தவொரு தடையும் இல்லை”எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.