பொன் அலை வீசும் மலையாள திரைத்துறையில் சமரசமற்ற ஒரு கமர்ஷியல் படம்: ஆசிப் அலி
மலையாள நடிகர் ஆசிப் திரைத்துறைக்கு 2009 -இல் அறிமுகம் ஆனாலும் அவரது வளர்ச்சி படிப்படியாகவே நிகழ்ந்துள்ளது.
கடைசியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தலவன், லெவல் கிராஸ், அடியோஸ் அமிகோ, கிஷ்கிந்தா காண்டம் என வரிசையாக பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்து அசத்தினார்.
சமீபத்தில் ஜீத்து ஜோசப்புடன் மிராஜ் படத்தில் நடித்து முடித்தார். இந்நிலையில், ரோஹித் விஎஸ் இயக்கத்தில் டிகிடாகா படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் வாமிகா கேபி, லுக்மேன் அவரன் நடித்துள்ளார்கள்.
ஓணம் வெளியீடாக வரவிருக்கும் இந்தப் படத்தில் ஜான் டென்வர் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆசிப் அலி கூறியதாவது:
போராட்ட குணம்
ஜான் டென்வர் என்னிடம் வந்தபோது என்னிடம் இருக்கும் போராட்டக்குணம் அவனில் இருப்பதை அறிந்தேன். அவனது மீட்சித்தன்மை, சவால்களுக்கு இடையே அவனது போராட்டம், எப்போதும் விடாமுயற்சியுள்ள குணம் எல்லாம் பிடித்தது.
இந்தக் கதாபாத்திரம் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் என்னை அப்படியே கொண்டுசென்றது.
’டிகிடகா’ வியர்வையும் ரத்தத்தையும் அதிகமாக கோரும் படமாகும். என்னைப் பொருத்தவரை உடல் தகுதிபெற பல மாதங்கள் தேவைப்பட்டன. நான் என்னுடைய எல்லாவற்றையும் இந்தப் படத்துக்காக கொடுத்துள்ளேன்.
2023-இல் இந்தப் படத்தின் சண்டைப் பயிற்சியின்போது பல்நாள்கள் படுக்கையிலேயே படுத்துக்கிடந்தேன், பல வாரங்கள் வீல் சேரில் இருந்தேன்.
சமரசமற்ற கமர்ஷியல் படம்
முக்கியமாக இந்தக் கதாபாத்திரத்திற்காக ஓராண்டு தயாராகி வந்தது எல்லாமே வீணானது. ஜான் டென்வரை போல் அல்லாமல் நான் அதிகமாக மருத்துவமனையில் அழுதேன்.
18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முழு வீச்சில் படப்பிடிப்பைத் தொடங்கினோம். இந்தமுறை மெனிஸ்கஸ், தசைக்கிழைந்து குணமாகிய காலுடன் மீண்டும் வியர்வை, ரத்தத்தை அளித்து படத்துக்கு தேவையானதை அளித்தேன்.
இந்தாண்டு இறுதியில் இந்தப் படம் வெளியாகும். அதற்கு முன்பாக இதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆர்வம் தூண்டியது. இந்தப்படம் அதிகமான உறுதியையும் உழைப்பையும் கோரியது. நடிகர்களுக்காக மட்டுமில்லாமல் படக்குழு அனைவருக்குமே அது தேவைப்பட்டது.
மலையாள சினிமா தனது பொன் அலையில் மகிழ்ந்திருக்கும் வேளையில் இதுவரை அனுபவிக்காத சமரசமற்ற ஒரு கமர்ஷியல் திரைப்படத்தை பெரிய திரையில் ஆக்ஷன் காட்சிகளுடன் ரசிக்க உழைத்திருக்கிறோம்.
சினிமாவை ரசிக்கும் உங்களிடமிருந்து ஆதரவை மட்டுமே எதிர்பார்க்கிறேன். இதுவரை எனக்கு அளித்த அன்புக்கும் வழி நடத்தல்களுக்கும் நன்றி எனக் கூறினார்.