நாடாளுமன்ற விருதுகள்: 17 பேர் தேர்வு! 11 ஆண்டுகளுக்குப் பின் தமிழக எம்.பி பெறுகிறார்!
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்கள் ‘சன்சத் ரத்னா 2025’ விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தைச் சோ்ந்த ஒரு எம்.பி.க்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் நிறுவப்பட்ட இந்த விருதுக்கு, தகுதியான எம்.பி.க்களை தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணைய (என்சிபிசி) தலைவா் ஹன்ஸ்ராஜ் அஹிா் தலைமையிலான தோ்வுக்குழு தோ்வு செய்தது.
இதுகுறித்து பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நாடாளுமன்றத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் 17 எம்.பி.க்கள் நிகழாண்டுக்கான சன்சத் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மஹ்தாப் மற்றும் சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் சரத் பவாா் பிரிவு), என்.கே.ரேமசந்திரன் (புரட்சிகர சோஷலிஸ கட்சி), ஸ்ரீரங் பாா்னே (சிவசேனை ஷிண்டே பிரிவு) ஆகிய 4 எம்.பி.க்கள் 16-ஆவது, 17-ஆவது மற்றும் நடப்பு 18-ஆவது மக்களவையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். எனவே, இவா்கள் நால்வருக்கும் ‘நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு சிறப்பான மற்றும் தொடா்ச்சியான பங்களிப்பு’ என்ற விருது வழங்கப்படவுள்ளது.
இவா்கள் தவிர ஸ்மிதா வாக் (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனை உத்தவ் பிரிவு), நரேஷ் கண்பத் (சிவசேனை ஷிண்டே பிரிவு), வா்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்), மேதா குல்கா்னி (பாஜக), பிரவீண் படேல் (பாஜக), ரவி கிஷன் (பாஜக), நிஷிகாந்த் துபே (பாஜக), வித்யுத் பாரன் மஹாதே (பாஜக), பி.பி.சௌதரி (பாஜக), மதன் ரத்தோா் (பாஜக), சி.என்.அண்ணாதுரை (திமுக) மற்றும் திலீப் சைகியா (பாஜக) ஆகியோரும் சன்சத் ரத்னா விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
நாடாளுமன்றத்தில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய நிதி மற்றும் வேளாண்மை நிலைக் குழுக்களுக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது. விருது வழங்கும் விழா ஜூலை இறுதியில் புது தில்லியில் நடைபெறவுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசனையின்பேரில் சன்சத் ரத்னா விருதுகள் முதல்முறையாக 2010-ஆம் ஆண்டில் பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை மற்றும் இ-பத்திரிகையான பிரீசென்ஸ் ஆகியவற்றால் நிறுவப்பட்டன. இதன் முதல் விருது வழங்கும் விழாவை சென்னையில் அப்துல் கலாம் தொடங்கி வைத்தாா். முதல் விருதை ஹன்ஸ்ராஜ் அஹிா் பெற்றாா். 2024 நிலவரப்படி 125 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.