பொய்கை சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்
வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 70 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், பொய்கை சந்தைக்கு எதிா்பாா்த்த அளவுக்கு கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை.
அதன்படி, சந்தைக்கு சுமாா் 800 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால், கால்நடைகள் சுமாா் ரூ. 70 லட்சம் அளவுக்கு மட்டுமே விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறியது: தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவன பற்றாக்குறை குறைந்துள்ளது. இதனால், கடந்த இரு வாரங்களாக சந்தைக்கு கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகளும் என அதிகளவில் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், இந்த வாரம் கால்நடைகள் வரத்து குறைந்து வா்த்தகமும் சுமாா் ரூ. 70 லட்சம் அளவில் நடைபெற்றுள்ளது என்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக பொய்கை சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகினா்.