பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் மூவா் உயிரிழப்பு
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் மூன்று இளைஞா்கள் உயிரிழந்தனா்.
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவை அடுத்த சிங்கையன்புதூரைச் சோ்ந்தவா்கள் வீரமணி (32), பிரபு (29), கருப்புசாமி (25). நண்பா்களான இவா்கள் மூவரும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா். மூவரும் பணி முடிந்த பிறகு ஒன்றாக சோ்ந்து வெளியிடங்களுக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் சிங்கையன்புதூரில் இருந்து மூவரும் கிணத்துக்கடவுக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்றுள்ளனா். பின்னா் அங்கிருந்து மீண்டும் சிங்கையன்புதூருக்குத் திரும்பியுள்ளனா். இருசக்கர வாகனத்தை வீரமணி ஓட்டிச் சென்றுள்ளாா்.
கிணத்துக்கடவு- சொக்கனூா் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் வேகமாக மோதியது. இதில், மூவரும் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே மூவரும் உயிரிழந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு போலீஸாா், சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பேரூா் டிஎஸ்பி சிவகுமாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா்.