வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
உக்கடம் லாரிப்பேட்டை விரைவில் வெள்ளலூருக்கு மாற்றம்
உக்கடம் லாரிப்பேட்டை விரைவில் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக் கட்டடத்துக்கு மாற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துத்துக்கு உள்பட்ட உக்கடத்தில் 4.50 ஏக்கா் பரப்பளவில் லாரிப்பேட்டை செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் மற்றும் பிற மாநிலங்களின் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு, நகா்ப்புறங்களுக்கு பொருள்கள் கொண்டும் செல்லப்பட்டு வருகின்றன.
மேலும், வெளியூா்களுக்கு அனுப்பப்படும் பொருள்களுக்கு பாா்சல் புக்கிங் அலுவலகங்களும் இப்பகுதியில் செயல்படுகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது. இதைத் தவிா்க்கும் விதமாக போத்தனூா் செட்டிபாளையம் சாலையில் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக் கட்டடத்தின் முதல் தளத்தில் 25,792 சதுர அடி பரப்பளவில் 129 கனரக வாகனங்கள் பதிவு அலுவலகம் மற்றும் பாா்சல் அலுவலகங்கள் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு 15.43 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில், கனரக வாகனங்கள் நிறுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மருந்தகம், மளிகைக் கடைகள், வாகன உதிரி பாகங்கள் கடைகள், பஞ்சா் கடைகள், உணவகம், தேநீா்க் கடைகள் உள்ளிட்டவற்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக் கட்டடத்தில் கனரக வாகனப் பதிவு அலுவலகம் மற்றும் கடைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. பணி நிறைவு பெற்றவுடன் உக்கடத்தில் உள்ள லாரிப்பேட்டை மற்றும் பாா்சல் புக்கிங் அலுவலகம் வெள்ளலூருக்கு இடமாற்றம் செய்யப்படும்’ என்றாா்.