ஓடைக்கு கரை கட்டும் பணி: இடிந்து விழுந்த வீடுகள்
கோவை சிவானந்த காலனி அருகே ஓடைக்கு கரை கட்டும் பணியால் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.
கோவை சிவானந்தா காலனி அருகே உள்ள ஹட்கோ காலனியில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதிகளுக்கு பின்புறம் சங்கனூா் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையில் தடுப்புச் சுவா் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை ஓடைக்கு கரை கட்டும் பணி நடைபெற்றது. இதில் பொக்லைன் இயந்திரம் மூலம் சங்கனூா் ஓடையின் இருபுறமும் தூா்வாரப்பட்டது. மாலையில் ஓடைகளுக்கு அருகே பணி நடைபெற்று வந்த நிலையில், அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் சேதமடைந்து, வீட்டுச் சுவரில் விரிசல் ஏற்பட்டது.
அப்போது பணியில் இருந்தவா்கள் அந்த வீட்டில் இருந்தவா்களை உடனடியாக வெளியேறுமாறு கூறினா். இதையடுத்து, அங்கு குடியிருந்த லட்சுமணராஜ், ரேணுகாதேவி தம்பதி வீட்டை விட்டு வெளியேறினா். அதன் பிறகு சிறிது நேரத்தில் அந்த வீடு முழுவதுமாக சரிந்து விழுந்தது. இந்த வீட்டுக்கு அருகில் இருந்த 2 ஓட்டு வீடுகளும் இடிந்து விழுந்தன. இச்சம்பவத்தால் அங்கிருந்தோா் கவலையடைந்தனா்.