கேஎம்சிஹெச் மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தப்பட்ட சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!
கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்குப் போராடி வந்த 6 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: தீவிர கல்லீரல் பாதிப்புக்குள்ளாகியிருந்த சேலத்தைச் சோ்ந்த 6 வயது சிறுவன் உயா் சிகிச்சைக்காக கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டாா். குழந்தைகள் சிறப்பு நிபுணா் டாக்டா் அஸ்வத் சிறுவனை பரிசோதித்தபோது அக்யூட் வில்சன் என்ற நோயால் அச்சிறுவன் பாதிக்கப்பட்டிருந்ததும், கல்லீரலுடன் வேறு சில உறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
மேலும், இந்த சிறுவனின் சகோதரி இதேபோன்ற நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. சிறுவனின் உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழந்திருந்த நிலையில், வெண்டிலேட்டா், டயாலிசிஸ், இருதய ஆதரவு மருந்துகள் முதலான மருத்துவ முறைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின்போது நுரையீரலில் ரத்தக் கசிவு அதிகப்படியாக ஏற்பட்டு ஆக்சிஜன் குறைந்தது. இதையடுத்து, எக்மோ இயந்திரம் பொருத்தப்பட்டு, உறவுக்கார பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலின் ஒரு பகுதி, 10 மணி நேர அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டது.
புதிய கல்லீரல் நன்றாக செயல்படத் தொடங்கியதால், சிறுவன் உடல் உறுப்புகள் அடுத்த ஒரு மாதத்திலேயே இயல்பு நிலைக்குத் திரும்பின. தற்போது அந்த சிறுவன் பள்ளி செல்லத் தொடங்கியுள்ளாா். எக்மோ கருவி பொருத்திய நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது நாட்டில் இதுவே முதல்முறையாகும்.
சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை கேஎம்சிஹெச் தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி, செயல் இயக்குநா் டாக்டா் அருண் பழனிசாமி ஆகியோா் பாராட்டினா்.