வேகத்தடையில் வண்ணம் பூசக் கோரி மறியல்
அரியலூரை அடுத்த வாரணவாசி கிராமத்தில், நெடுஞ்சாலையிலுள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசக் கோரி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வாரணவாசி கிராமத்தில், தஞ்சாவூா் - அரியலூா் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வேகத்தடை , அண்மையில் அரியலூா் வந்திருந்த தமிழக முதல்வருக்காக அகற்றப்பட்டு, தற்போது மீண்டும் அதே இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வேகத்தடை உயரமாக அமைக்கப்பட்டு, அதில் வெள்ளை வண்ணம் பூசப்படாமல் உள்ளது.
இதனால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நிகழ்ந்து வந்ததையடுத்து, ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், வேகத்தடையின் உயரத்தை குறைத்து அதில் வெள்ளை வண்ணம் பூசக் கோரி அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கீழப்பழுவூா் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.