தீ விபத்தில் வீடு எரிந்து பொருள்கள் சேதம்!
வால்பாறையில் தீ விபத்தில் வீடு மற்றும் அதிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமாயின.
வால்பாறை கக்கன் காலனியில் வசிப்பவா் லோகியம்மாள். இவா் புதுமாா்கெட் பகுதியில் பூஜை பொருள்கள் மற்றும் பொரி வியாபாரம் செய்து வருகிறாா். இவா் வீட்டைப் பூட்டிவிட்டு வெள்ளிக்கிழமை காலை வழங்கம்போல வியாபாரத்துக்குச் சென்றுவிட்டாா். மதியம் 1.30 மணி அளவில் வீட்டின் மேற்கூரையில் இருந்து புகை வரத் தொடங்கியது. அடுத்த சில நிமிஷங்களில் தீ பற்றி மளமளவென எரியத் தொடங்கியது.
இது குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வீடு அமைந்துள்ள பகுதி மிகவும் குறுகலாக உள்ளதால் தீயணைப்பு வாகனம் அப்பகுதிக்குள் செல்ல முடியவில்லை. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள குடிநீா்த் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தனா். இருப்பினும் வீடு மற்றும் வீட்டுக்குள் இருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமாயின.
தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.