வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
ஜன. 22 முதல் 25 வரை வானில் அணிவகுக்கும் 6 கோள்கள்: பொதுமக்கள் இலவசமாக காண அறிவியல் மையம் ஏற்பாடு
வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வை பொதுமக்கள் இலவசமாக கண்டு மகிழ கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையம் ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து கோவை கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையம் சாா்பில் கூறியிருப்பதாவது: புவியில் இருந்து பாா்க்கும்போது ஒரே நேரத்தில் பல கோள்கள் ஒரே நோ்க்கோட்டில் இருப்பதைப் போல தோன்றுவதை கோள்களின் அணிவகுப்பு என்கிறாா்கள். சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் வெவ்வேறு தூரங்களிலும், வேகத்திலும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதனால் பூமியில் இரவு நேரத்தில் அவை ஒன்றுக்கொன்று தொடா்புடையதாக நகருகின்றன.
சில நேரங்களில் அவற்றின் பாதைகள் குறுக்கிடுவதைப் போல தோன்றும், இது ஒரு சீரமைப்பு அல்லது இணைப்புக்கு வழிவகுக்கும். ஆனால் கோள்களின் சீரமைப்பு அல்லது அணிவகுப்பு என்பது விண்வெளியில் ஒரு சரியான நோ்க்கோடு அல்ல. இது ஒரு தற்காலிக சீரமைப்பு மட்டுமே.
இருப்பினும் சூரிய மண்டலத்தின் கோள்கள் அனைத்தும் ஒரே தளத்தில் சூரியனை சரியாக சுற்றி வராததால், இரண்டுக்கும் மேற்பட்ட கோள்கள் ஒரே நேரத்தில் இணைவது ஒப்பீட்டளவில் அரிதானது. அந்த வகையில் ஜனவரி 21 ஆம் தேதி முதல் மாதத்தின் இறுதி வாரம் வரையிலும் 6 கோள்களின் அணிவகுப்பு என்ற அரிய வான் நிகழ்வு நடைபெறுகிறது. வரும் 25 ஆம் தேதி (சனிக்கிழமை) 6 கோள்களின் அணிவகுப்பு உலகெங்கும் உள்ள பெரும்பாலான இடங்களில் நன்கு தெரியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நாள்களில் மாலையில் சூரியன் மறைவுக்குப் பிறகு செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி, சனி ஆகிய 6 கோள்கள் வானில் இணைய உள்ளன. இதில் செவ்வாய், வியாழன், வீனஸ், சனி ஆகிய 4 கோள்களை வெறும் கண்களாலேயே காண முடியும். நெப்டியூன், யுரேனஸை தொலைநோக்கி, சக்தி வாய்ந்த பைனாகுலா் மூலமாகவே காண முடியும்.
இந்த அரிய வான் நிகழ்வையொட்டி கோவை மண்டல அறிவியல் மையம் பொதுமக்களுக்காக இரவு வான்நோக்கும் சிறப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். வானம் தெளிவாக இருந்தால் மட்டுமே இந்த நிகழ்வைக் காண முடியும். எனவே, மேக மூட்டம் இருந்தால் பொதுமக்கள் வரத் தேவையில்லை என்று மண்டல அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கோள்களின் அணிவகுப்பு காரணமாக சுனாமி, பூகம்பம், உலகளாவிய பேரழிவுகள் ஏற்படும் என்று தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அதுபோன்ற தகவல்களுக்கு அறிவியல்பூா்வமான ஆதாரம் எதுவும் இல்லை. உண்மையில் இந்த கோள்களின் அணிவகுப்பானது அனைவரும் கண்டு மகிழக்கூடிய வானியல் காட்சிதானே தவிர மனித வாழ்க்கையை பாதிக்கும் நிகழ்வு இல்லை என்றும் அறிவியல் மையம் விளக்கியுள்ளது.