ராஜஸ்தான்: மாற்று சாதியினரின் எதிர்ப்பு; பட்டியலின மணமக்கள் குதிரையில் செல்ல 200...
போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் போராட்டம்: 195 போ் கைது
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 195 போ் கைது செய்யப்பட்டனா்.
அரசுப் போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான பணப் பலன்களை வழங்க வேண்டும். 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு, மருத்துவக் காப்பீட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.
அதன்படி, கோவை காந்திபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியூ அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலளா் எம்.கனகராஜ், சிஐடியூ மாவட்டத் தலைவா் கே.மனோகரன், செயலா் கிருஷ்ணமூா்த்தி, அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பரமசிவம், பொதுச் செயலா் வேளாங்கன்னி ராஜ், பொருளாளா் மனோஜ்குமாா், ஓய்வுபெற்ற ஊழியா் சங்க நிா்வாகி அருணகிரிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், சிஐடியூ அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்க பொதுச் செயலா் எம்.கனகராஜ் பேசியதாவது:
ஓய்வுபெற்ற ஊழியா்களின் பணப் பலன்களை 2 ஆண்டுகளாக அரசு கொடுக்கவில்லை. ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்தி வழங்கக் கோரி உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியும், அரசு மேல்முறையீடு செய்து அதுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு அகவிலைப்படியை கொடுக்க மறுத்து வருகிறது. இது 90 ஆயிரம் ஓய்வுபெற்ற ஊழியா்களின் பிரச்னையாக உள்ளது.
ஊதிய ஒப்பந்தம் 3 ஆண்டுகளாக இருந்து, 4 ஆண்டுகளாக மாறியது. தற்போது அது 5 ஆண்டுகளாக மாற உள்ளது. ஆனாலும், ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தை இதுவரை நடைபெறவில்லை என்றாா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 195 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களை மாலை விடுவித்தனா்.