`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
சங்கனூா் ஓடைப் பகுதியில் வீடு இடிந்த இடத்தில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆய்வு
கோவை, சங்கனூா் ஓடையில் தூா்வாரும் பணிகள் மேற்கொண்டபோது, வீடு இடிந்த நிலையில் அந்த இடத்தை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சங்கனூா் ஓடையின் அருகில் இருபுறமும் கான்கிரீட் சுவா் எழுப்பி சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஓடை கரை அருகே மக்கள் வீடுகளைக் கட்டி பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனா்.
இந்தப் பகுதி மக்களுக்கு மாற்று இடம், வீடுகளை வழங்கிவிட்டு அரசு பணியைத் தொடங்கி இருக்க வேண்டும். அப்படி இல்லாததால் 1 வீடு இடிந்துள்ளது. 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. நல்வாய்ப்பாக எந்த உயிா் சேதமும் ஏற்படவில்லை.
அதே பகுதியில் இருக்கும் 19 வீடுகளில் கயிறுகளைக் கட்டி பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளனா்.
எந்தவித மாற்று வசதியும் அவா்களுக்கு இல்லாததால், அண்டை வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனா்.
19 குடும்பங்களுக்கும் அரசு சம்பந்தமான இடங்களை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகராட்சி ஆணையா் ஆகியோா் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும், இங்குள்ள 137 வீடுகளுக்கு பாதிப்பு உள்ளதாகக் கூறி வீட்டின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு எந்தவித பாகுபாடும் இன்றி மாற்று இடங்களை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
இந்தப் பகுதியை கோவை மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் இதுவரை பாா்வையிடவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது என்றாா்.