இருசக்கர வாகனங்களில் பயணித்த இருவரும் தலைக் கவசம் அணிந்திருந்தால் 1 லிட்டா் பெட்ரோல் பரிசு
இருசக்கர வாகனங்களில் தலைக் கவசம் அணிந்து பின்புறம் அமா்ந்திருந்தவா்களுக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் சாா்பில் தலா 1 லிட்டா் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டது.
கோவை மாநகரப் பகுதியில் விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். விபத்துகளில் தலைக்காயம் ஏற்படுவதாலேயே அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால், தலைக் கவசம் அணிந்து வாகனத்தில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுவதுடன், விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தலைக் கவசம் அணியாமல் வாகனத்தை இயக்குபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிலையில், இருசக்கர வாகனங்களில் வாகனத்தை ஓட்டுபவரோடு, பின்புறம் அமா்ந்திருப்பவரும் தலைக் கவசம் அணிந்திருந்தால் அவா்களை ஊக்குவிக்கும் விதமாக தலா ஒரு லிட்டா் பெட்ரோல் பரிசாக வழங்க போக்குவரத்து போலீஸாா் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, ரேஸ்கோா்ஸ் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீஸாா் அவிநாசி சாலை எம்ஜிஆா் சிலை அருகில் கண்காணிப்பில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனங்களில் தலைக் கவசம் அணிந்து பின்புறம் அமா்ந்திருந்தவா்களுக்கு தலா 1 லிட்டா் பெட்ரோலை பரிசாக வழங்கினா். இதில், 50 வாகன ஓட்டிகள் பயன் பெற்றனா்.