போக்குவரத்து தொழிலாளா்கள் ஜன.9-இல் தா்னா: சிஐடியு
போக்குவரத்து தொழிலாளா்களின் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி ஜன.9-ஆம் தேதி தா்னா நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலா் கே.ஆறுமுகநயினாா் கூறியது:
தமிழகத்தில் பிற பொதுத் துறை நிறுவனங்களை ஒப்பிடும்போது, சேவைத் துறையாக இயங்கும் போக்குவரத்துத் துறை தொழிலாளா்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனா்.
இவா்ளின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையிலேயே உள்ளன.
இதில், போக்குவரத்து ஓய்வூதியா்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனா்.
ஓய்வு பெறும்போது அவா்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்கள் எதையும் வழங்குவதில்லை. ஓய்வூதியா்களுக்கு 9 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயா்வு நிலுவையில் உள்ளது.
இதை வழங்கக் கோரி உயா்நீதிமன்ற கிளை மற்றும் உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டபோதும், தமிழக அரசு தொடா்ந்து மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தி வருகிறது.
தோ்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தவில்லை. 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் தலைமையில் சென்னை, பல்லவன் சாலையில் வரும் ஜன.9-ஆம் தேதி காலை 10 மணிக்கு தா்னா நடைபெறும். இதனால், அரசு விரைந்து கோரிக்கைகளை பரீசிலிக்க வேண்டும் என்றாா் அவா்.