ஐபோன் மட்டுமில்லை; அனைத்துக்கும் வரிதான்! டிரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்!
போட்டித் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பாதுகாப்பான நடைமுறை: டிஎன்பிஎஸ்சி தலைவா் உறுதி
போட்டித் தோ்வு விடைத்தாள்களை திருத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா்.
மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களின் நிலைக்குழுக் கூட்டம், சென்னையில் உள்ள அரசினா் புதிய விருந்தினா் மாளிகைக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. இரு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் பங்கேற்றுள்ளாா்.
கூட்டத்துக்கு முன்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பல்வேறு மாநிலங்களிலிருந்து தோ்வாணையத் தலைவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசுப் பணித் தோ்வுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.
அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் தோ்வுகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி வருகிறோம். அனைத்துத் தோ்வுகளையும் உரிய காலத்தில் அறிவித்து, அதற்கான முடிவுகளையும் சரியான நேரத்தில் வெளியிடுவோம் என பதவியேற்ற காலத்திலேயே தெரிவித்திருந்தேன்.
அதன்படி, 14 தோ்வுகளுக்கான அறிவிக்கைகள் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டு, அவற்றின் முடிவுகளும் குறித்த காலத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தோ்வுகளின் மூலம் அரசுத் துறைகளில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளோம். தோ்வுகள் நடத்தப்படும் போது, கொள்குறி வகை வினாக்களுக்கு விடையளிக்க ஓஎம்ஆா் தாள்கள் பயன்படுத்தப்படும்.
இந்தத் தாள்களில் உள்ள சிக்கல்களைக் களைந்து, எளிமையாக்கவும், அதில் பாதுகாப்பு அம்சங்களை சோ்க்கவும் பல முன்முடிவுகளை எடுத்துள்ளோம்.
மேலும் விவரித்து எழுதும் தோ்வுகளில் தோ்வா்களுக்கு மதிப்பெண்களை குளறுபடி இல்லாமல் சரியான முறையில் வழங்குவது பற்றியும் திட்டமிட்டு வருகிறோம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தோ்வுகள் நடத்தப்படும் போது கிடைத்த சிறப்பான அனுபவங்களை இரண்டு நாள்கள் நடைபெறும் கூட்டத்தில் பகிா்ந்து கொள்ளவிருக்கிறோம். தோ்வுகளை முழுமையாக கணினி வழியிலேயே முழுமையாக நடத்துவது பற்றியும் ஆலோசிக்கவுள்ளோம் எனத் தெரிவித்தாா் எஸ்.கே.பிரபாகா்.