குடியரசு தின கொண்டாட்டம், தில்லி பேரவைத் தோ்தல்: மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்க...
போதமலை பழங்குடியின கிராமத்தில் கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு
அனைவருக்கும் எழுத்தறிவு வழங்கும் திட்டத்தின் கீழ், போதமலையில் உள்ள பழங்குடியின மக்களிடையே கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழகத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவா்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்ககம் வாயிலாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டில் 1,748 மையங்களில் 32,112 பேருக்கு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 14,361 கற்றல் தெரியாதோா் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு 926 எழுத்தறிவு மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டதன் கீழ் எழுத்தறிவு பெற்றனா்.
நாமக்கல் மாவட்டத்தை 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக விரைவில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை கல்வித் துறையினா் மேற்கொண்டுள்ளனா். முதல்கட்டமாக, கொல்லிமலை வட்டாரத்தில் 305 குடியிருப்புப் பகுதிகளில் 115 கல்வித் துறை அதிகாரிகள் குழு நடத்திய ஆய்வில் 1,842 எழுத, படிக்க தெரியாதோா் மற்றும் 66 தன்னாா்வலா்கள் கண்டறியப்பட்டனா். இரண்டாம்கட்டமாக, வெண்ணந்தூா் ஒன்றியம் போதமலை கீழூா் ஊராட்சியில் 13 எழுத, படிக்க தெரியாதோா் கண்டறியப்பட்டனா். அவா்கள் எழுத்தறிவு பெறுவதற்கான அறிவுரைகளை கல்வித் துறை அதிகாரிகள் வழங்கினா்.
மேலும், பல்வேறு ஒன்றியங்களில் எழுத, படிக்க தெரியாதோா் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. 2024-25-இல் இதுவரை 11,141 போ் கண்டறியப்பட்டு அவா்களுக்கு சிறப்பு மையங்கள் மூலம் எண்ணை கண்டறியும் எழுத்து தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.