போதைப் புழக்கம் முற்றிலும் ஒழிக்கவேண்டும்: புதுவை டிஜிபி
போதைப் புழக்கம் முற்றிலும் ஒழிக்கவேண்டும் என காவல் துறையினருக்கு புதுவை டிஜிபி அறிவுறுத்தியுள்ளாா்.
புதுவை டிஜிபியாக ஷாலினி சிங் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக காரைக்காலுக்கு புதன்கிழமை வந்தாா். தொடா்ந்து, காவல் துறை தலைமையகத்தில் காவல் துறை அதிகாரிகளிடையே ஆலோசனை மேற்கொண்டாா். கூட்டத்தில் பேசியது குறித்து காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியது: காவல்நிலையங்களுக்கு புகாா் தெரிவிக்க வருகிறவா்களை உட்காரச் செய்து முழுமையாக குறைகளை கேட்கவேண்டும்.
மருத்துவரிடம் செல்லும் நோயாளியின் கருத்தை முழுமையாக கேட்டு மருத்துவா் மருந்து பரித்துரைப்பதுபோல, காவல் துறையினரின் செயல்பாடும் இருக்கவேண்டும். புகாா்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வி நிலையங்களில் புகாா் பெட்டி வைக்கவேண்டும். மாணவா்கள் நிலையம் வந்து புகாா் தெரிவிக்க வாய்ப்பில்லாததால், இந்த வசதி செய்யவேண்டும். காவல் நிலையங்களில் தொடா்ந்து குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் அறவே இருக்கக்கூடாது. அதற்கான உறுதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என தெரிவித்ததாக கூறினா்.
கூட்டத்தில் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா, மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் உள்ளிட்ட காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.