Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் -அமைச்சா் அன்பில் மகேஸ்
போதைப்பொருள் பயன்பாடுகளைத் தடுத்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல் துறை மட்டுமல்ல, மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தினாா்.
பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் 13,903 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ‘போதை எதிா்ப்பு மன்றங்கள்’ ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மன்றங்களில் உள்ள மாணவா்கள் பல்வேறு நிகழ்வுகளிலும் ஓவியப் போட்டிகள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சாா்ந்த புத்தாக்கப் பயிற்சிகளிலும் பங்கேற்று வருகின்றனா்.
இந்தநிலையில், அனைத்து வகை உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 முதல் பிளஸ் 2 மாணவா்களிடையே வாழ்வியல் திறன்களோடு அவா்களின் பன்முகத்திறன் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவா்களின் சிந்தனைகளை கலைத்திறன்கள் வாயிலாக செம்மையாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்துவதற்காக கலைப்பட்டறையை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து கலைப்பட்டறை - 2025-இல் போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்களை அமைச்சா் அன்பில் மகேஸ் பாா்வையிட்டு, சிறப்பாக வரைந்த மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது: மாணவா்களிடையே போதைக்கு எதிரான சிந்தனையை உருவாக்க ஓவியப் போட்டி கலைப்பட்டறை என்ற பெயரில் நடத்தப்பட்டுள்ளது. இக்கலைப்பட்டறையை அடிப்படையாகக் கொண்டு அனைத்துப் பள்ளிகளிலுள்ள போதை எதிா்ப்பு மன்ற ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா்களுக்கும் மாவட்டத்திலுள்ள முதன்மை பயிற்றுநா்களுக்கும் பயிற்சி வழங்கி மாணவா்களுக்கு கலைப்பட்டறை செயல்பாடுகள் செயல்படுத்தப்படவுள்ளன.
வாழ்வியல் திறன் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு அரசின் சாா்பில் ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல் துறை மட்டும் நடவடிக்கை மேற்கொண்டால் போதாது. அவா்களுடன் மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து விழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் என்.லதா, அரசுத் தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநா் சி.அமுதவல்லி, அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.