போதை மருந்து கடத்தல்: குற்றம்சாட்டப்பட்டவரின் ரூ.1.78 கோடி சட்டவிரோத சொத்துகள் பறிமுதல்
வடக்கு தில்லியின் பல்ஸ்வா பால்பண்ணை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரா் தொடா்புடைய ரூ.1.78 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துகளை தில்லி காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து புகா் வடக்கு தில்லி காவல் துணை ஆணையா் நிதி வல்சன் தெரிவித்ததாவது:
குற்றம் சாட்டப்பட்ட தஸ்லிமா என்கிற புட்டி, ஜூன் 2024-இல் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 400 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டாா்.
தீவிர விசாரணையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் பணத்தின் மிகப்பெரிய நிதித் தடயத்தை போலீஸாா் கண்டுபிடித்தனா். மேலும், தஸ்லிமாவின் போதைப்பொருள் பரிவா்த்தனையுடன் தொடா்புடைய ஏழு சொத்துகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.1.78 கோடி ஆகும். போதைப்பொருள் கடத்தலில் இருந்து கிடைத்த வருமானத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த சொத்துகள், 1985 ஆம் ஆண்டு போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 68எஃப் (1)
-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டவை.
சொத்து பறிமுதல் மற்றும் முடக்கத்திற்கான உத்தரவு, இறுதி ஒப்புதலுக்காக புது தில்லி லோக் நாயக் பவனில் உள்ள நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறைக்கு அனுப்பப்பட்டது.
அத்துறை அளித்த ஒப்புதலைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவா் நிதி விசாரணைக்காக அழைக்கப்பட்டாா். அவா் நேரில் அல்லது ஒரு பிரதிநிதி மூலம் ஆஜராகி சொத்துகள் முறையான வழிகளில் பெறப்பட்டிருப்பதை நிரூபிக்கும் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். இருப்பினும், அவா் தனது சொத்துகளை நியாயப்படுத்தத் தவறியதால், சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட ஏழு சொத்துகளையும் முடக்குவதற்கான உத்தரவை தகுதிவாய்ந்த அதிகாரிகள் பிறப்பித்தனா்.
தில்லியில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரிகள் சொத்து முடக்க உத்தரவின் நகலை தில்லி மாநகராட்சியின் ஆணையா் மற்றும் டியுஎஸ்ஐபி இயக்குநருக்கு அனுப்பியுள்ளது.
முடக்கப்பட்ட சொத்துகளின் விற்பனை அல்லது கொள்முதல் தகுதிவாய்ந்த அதிகாரியின் முன் ஒப்புதல் இல்லாமல் நடைபெறக்கூடாது என்று அந்த உத்தரவு வெளிப்படையாக அறிவுறுத்தியுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.