மகன் கொடுத்த யோசனை: மியாசாகி மாம்பழத்தால் லட்சாதிபதியான விவசாயி
ஜப்பானில் விளையும் தனித்துவமான மியாசாகி மாம்பழக் கன்றுகளை வாங்கிவந்து இரண்டு ஆண்டுகளாக பராமரித்து வந்த தெலங்கானா விவசாயி, தற்போது லட்சாதிபதியாகியிருப்பதுதான் வைரலாகியிருக்கிறது.
பொதுவாக ஜப்பானில் மட்டுமே விளையும் இந்த மியாசாமி மாம்பழம், நிறத்தாலும் சுவையாலும் லட்சக் கணக்கில் விலை போகும் மாம்பழ வகையில் ஒன்றாக விளங்குகிறது.
தெலங்கானாவைச் சேர்ந்த சுமன்பாய் என்ற விவசாயியின் மகன் பிலிப்பின்ஸிலிருந்து மியாசாகி மாம்பழங்களை வாங்கி வந்து தனது தாயிடம் கொடுத்து வளர்க்குமாறு சொல்லயிருக்கிறார்.
கண்ணும் கருத்துமாக இரண்டு ஆண்டுகள் அந்த மாமரங்களைப் பராமரித்து வந்த விவசாயி, தற்போது அதில் விளைந்த மாம்பழங்களை நல்ல விலைக்கு விற்றுவருகிறார்.
போஸி கிராமத்தில், வளர்ந்துள்ள இந்த மியாசாமி மாம்பழங்கள் ஒன்று ரூ.10 ஆயிரம் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கடந்த வாரம் அப்பகுதியில் நடந்த வேளாண் கண்காட்சியில், இவரது மாம்பழங்கள்தான் பலரது கவனத்தையும் ஈர்த்து நல்ல வருவாய்க்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது.
யுபிஎஸ்இ தேர்வுக்கு தயாராக வந்த நந்த்கிஷோர், மியாசாகி மாம்பழங்கள் குறித்து அறிந்து, அதனை ஆன்லைன் மூலம் ஒரு மரக்கன்று ரூ.6,500 என்ற விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.
அதனைப் பராமரிக்கும் விதம் என அனைத்தையும் ஆன்லைன் மூலம் அறிந்துகொண்டு அதற்கேற்ப பராமரித்துவந்துள்ளனர். ஜப்பானின் வெப்பநிலைக்கு ஏற்ப வளரும் இந்த மியாசாகி மாமரங்களை வெளியில் வளர்ப்பது மிகவும் கடினம் என்பதால், அதற்கு தகுந்தார் போல பல விஷயங்களையும் மாற்றியமைத்து மரம் வளர்க்கப்பட்டிருப்பதாகவும் இதுவரை 10 முதல் 12 மாம்பழங்கள் காய்த்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.