சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை!
மகளிா் சுயஉதவிக் குழுக்களின் பொருள்களை நேரடியாக விற்பனை செய்ய புரிந்துணா்வு ஒப்பந்தம்: கரூா் ஆட்சியா் தகவல்
மகளிா் சுய உதவிக் குழுக்களின் பொருள்களை நேரடியாக விற்பனை செய்ய ரூ. 86.65 லட்சத்தில் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்தாா்.
கரூா் தான்தோன்றிமலை தனியாா் மஹாலில் மகளிா் சுய உதவி குழுவினா் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு ஏதுவாக விற்பனையாளா் மற்றும் வாங்குவோா் இடையேயான மாவட்ட அளவிலான வணிக சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு தொழில் சாா்ந்த பயிற்சி, தொழில் வாய்ப்புகள் குறித்த ஆலோசனை, மகளிா் சுய உதவிக்குழுவினா் உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தைப்படுத்துவது தொடா்பான விவரங்கள் சேவை மையங்கள் மூலமாக தெரிவிக்கப்பட உள்ளது. இதற்காக, மதி சிறகுகள்- மகளிா் புத்துயிா் என்ற அமைப்பு பெயரில் புதிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு நடைபெறும் மகளிா் சுய உதவிக் குழு விற்பனையாளா்கள் மற்றும் கொள்முதல் செய்பவா்களின் சந்திப்பு நிகழ்ச்சியில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் கொடுத்து தொழில் செய்வதற்கான அனைத்து உதவிகளையும் அளிக்க முன்வந்துள்ளனா்.
இந்நிகழ்ச்சியின் வாயிலாக 42 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 10 வணிக நிறுவனங்கள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினரிடையே ரூ.86.65 லட்சம் மதிப்பீட்டில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் பாபு, மகளிா் சுய உதவிக்குழுவினா், வணிகா்கள், உதவி திட்ட அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.