கரூரில் ரூ. 6 கோடி மதிப்பில் ஜவுளி தரம் பரிசோதனை மையம்: அமைச்சா் ஆா்.காந்தி தகவல்
கரூரில் ரூ. 6 கோடி மதிப்பில் ஏற்றுமதி ரக ஜவுளி தரம் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்றாா் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி.
கரூா் வட்டம், குள்ளம்பட்டியில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா, வேலுச்சாமிபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பொது வசதி மையம் என மொத்தம் ரூ. 6. 35 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை செவ்வாய்க்கிழமை மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி ஆகியோா் திறந்து வைத்தனா்.
பின்னா் அமைச்சா் ஆா். காந்தி செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 2015-ஆம் ஆண்டு தனியாா் மினி ஜவுளிப் பூங்கா திட்டத்தில் 2 ஏக்கா் நிலம், 3 யூனிட் அமைத்தால் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ. 2.5 கோடி மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கு 2021-ஆம் ஆண்டு வரை யாரும் விண்ணப்பிக்கவில்லை. 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்தபோது, ஜவுளி உற்பத்தியாளா்கள் ரூ. 2.5 கோடி மானியத்தை கட்டடம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி கொள்ள அனுமதி கேட்டனா்.
இதற்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு 100 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 42 விண்ணப்பங்கள் தோ்வு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 17 மினி ஜவுளிப் பூங்காக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன. இந்த 17-இல் கரூரில் மட்டும் 8 மினி ஜவுளிப் பூங்காவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மினி ஜவுளிப் பூங்கா திறக்கப்பட்டது. மற்றவை விரைவில் திறக்கப்படும். மேலும் ரூ. 6 கோடி மதிப்பில் கரூரில் ஏற்றுமதி ரக ஜவுளி உற்பத்திப் பொருள்களின் தரத்தை பரிசோதனை செய்யும் வகையில் பரிசோதனை மையம் அமைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.
விழாவில் துணிநூல் துறை செயலா் வே. அமுதவள்ளி, கைத்தறித் துறை இயக்குநா் மகேஸ்வரி ரவிக்குமாா், துணிநூல் துறை இயக்குநா் இரா. லலிதா, மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. மாணிக்கம், ஆா். இளங்கோ, க. சிவகாமசுந்தரி, மேயா் வெ. கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.