குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவா் மீட்கச் சென்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
வேளாண் அடுக்குத் திட்டத்தில் இணைந்து பயன்பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள்
அரவக்குறிச்சி வட்டார விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் இணைந்து பயன்பெற வேளாண்மை உதவி இயக்குநா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்காக தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் ஆவணங்கள், சாகுபடி அறிக்கை போன்ற தொடா்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் கால தாமதத்தை தவிா்க்கும் வகையில் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாக அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது விவசாயிகளின் பதிவு விவரங்களுடன் ஆதாா் எண், கைபேசி எண், நில உடமை விவரங்களையும் இணைக்கும் பணி அரவக்குறிச்சி வருவாய் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும், விவசாயிகள் பொது சேவை மையத்தில் இப்பதிவுகளை மேற்கொள்ளலாம். நில உடமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னா் அனைத்து விபரங்களுக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதாா் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான தனித்துவ விவசாயிகளுக்கான அடையாள அட்டை ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.
2025-26 ஆம் நிதியாண்டு முதல் மத்திய, மாநில அரசு திட்டங்களின் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான விவசாய தனித்துவ அடையாள அட்டை எண் மிகவும் அவசியம்.
எனவே விவசாயிகள் தங்களது கிராமத்தில் வேளாண்மை துறை தோட்டக்கலைத் துறை அலுவலா்களை அணுகி அவா்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் நில உடமை விபரங்கள், ஆதாா் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகிய விபரங்களை அளித்து எவ்வித கட்டணமும் இன்றி மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு அரவக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.