குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவா் மீட்கச் சென்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு ரூ. 75 ஆயிரம் ஒப்பளிப்பு ஆணை வழங்கல்
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு அரசு வழங்கும் நிதி ரூ. 75 ஆயிரத்துக்கான ஒப்பளிப்பு ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவா்களுக்கு தமிழக அரசு ரூ. 75 ஆயிரம் வழங்குகிறது.
மேலும் உயா் கல்வி படிக்கும்போது மூன்று தவணையாகப் பிரிக்கப்பட்டு மாணவா்களது கல்லூரிகளுக்குப் பணம் வழங்கப்படும். மேற்கண்ட உதவித்தொகை பெறும் மாணவா்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முதல் தகவல் அறிக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை, வாரிசு சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், பாதுகாவலா், மாணவா் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகம், வட்டாட்சியா் சான்று இவற்றையெல்லாம் பெற்று 5 பிரதிகள் சமா்ப்பித்தல் வேண்டும். அதை வட்டாரக் கல்வி அலுவலா்கள் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவா்களுக்கு ஒப்பளிப்பு ஆணை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் தந்தையை இழந்த அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவா் ரித்தீஷ்க்கு, கரூா் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) முருகேசன் ஆணைப்படி வட்டாரக் கல்வி அலுவலா் பாண்டித்துரை, சதீஷ்குமாா் ஆகியோா் மாணவா் ரித்தீஷ்க்கு ரூ. 75 ஆயிரம் நிதிக்கான ஒப்பளிப்பு ஆணையை வழங்கினா்.