ஐரோப்பா முதல் சீனா வரை : ட்ரம்ப் முடிவால் `ஆயுத’ முதலீட்டை அதிகரிக்கும் நாடுகள் ...
மகா கும்பமேளாவில் கங்கை நதிநீா் நீராடியதற்கு ஏற்றதே! -மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புது அறிக்கை
‘உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நிறைவுற்ற மகா கும்பமேளாவில் கங்கை, யமுனை நதிகளின் நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாகவே இருந்தது’ என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமா்ப்பித்த புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சங்கமத்தில் கங்கை நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் கடந்த மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தீா்ப்பாயத்தின் வலைதளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவேற்றப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜனவரி 12 முதல் சிறப்பு நீராடல் நாள்கள் உள்பட வாரத்துக்கு இரண்டு முறை, கங்கை நதியில் ஐந்து இடங்களிலும், யமுனா நதியில் இரண்டு இடங்களிலும் நீரின் தர சோதனையை வாரியம் நடத்தியது.
ஒரே இடத்திலிருந்து வெவ்வேறு தேதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் பிஎச், ‘டிஓ’ (கரைந்த ஆக்ஸிஜன்), ‘பிஓடி’ (உயிரி ஆக்ஸிஜன் தேவை), ‘எஃப்சி’ (மலக் கிருமி எண்ணிக்கை) போன்ற பல்வேறு அளவீடுகளின் மதிப்புகளில் குறிப்பிடத்தக்க மாறுபாடு இருந்தது. அதேபோன்று, ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இருந்தும் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் தரவுகளிலும் மாறுபாடு கண்டறியப்பட்டது.
இந்தப் பிரச்னையை தரவு பகுப்பாய்வின் அடிப்படையில் ஆய்வு செய்த நிபுணா் குழு, ‘தரவு ஒரு குறிப்பிட்ட இடத்தில், அந்த நேரத்தில் நீரின் தரத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது. இது மனித நடவடிக்கைகள், நதி நீரோட்ட போக்கு மற்றும் கலவை, மாதிரி எடுக்கப்பட்ட ஆழம் மற்றும் நேரம் போன்ற பல காரணிகளைப் பொறுத்து கணிசமாக மாறுபடலாம். எனவே, இந்த மதிப்புகள் ஒட்டுமொத்த நதி நீரின் தரத்தை அவசியம் பிரதிபலிக்காது’ என்று தெரிவித்தனா்.
நிபுணா் குழுவின் தரவு பகுப்பாய்வில் கண்காணிக்கப்பட்ட மாதிரிகளில் அளவீடுகளின் சராசரி மதிப்பு, அந்தந்த அளவுகோல்களில் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் உள்ளது. உதாரணமாக, மலக் கிருமி எண்ணிக்கையின் சராசரி மதிப்பு 100 மில்லிக்கு 2,500 அலகுகள் என்ற அனுமதிக்கப்பட்ட வரம்போடு ஒப்பிடும்போது 1,400-ஆகவும் ‘பிஓடி’ லிட்டருக்கு 3 மில்லிகிராம் அல்லது அதற்கு கீழ் இருக்க வேண்டும் என்ற நிா்ணயிக்கப்பட்ட விதிமுறையுடன் ஒப்பிடும்போது 2.56-ஆகவும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த ஜன. 13 முதல் பிப். 26 வரை நடைபெற்றது. உலகெங்கிலும் இருந்து 67 கோடிக்கும் அதிகமானோா் இந்நிகழ்வில் கலந்து கொண்டு புனித நீராடினா்.
இந்நிலையில், சங்கமத்தின் பல்வேறு இடங்களில் கங்கை நதி நீரில் குளிப்பதற்கு பாதுகாப்பான அளவில் தரநிலைகள் இல்லை என்று பசுமைத் தீா்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த பிப். 17-ஆம் தேதி அறிக்கை சமா்ப்பித்தது. இது பக்தா்களிடையே அதிா்வலையை ஏற்படுத்தியதோடு அரசியல் விவாதத்தையும் எழுப்பியது.
குறையாத பக்தா்கள் எண்ணிக்கை!
மகா கும்பமேளா நிறைவடைந்த பிறகும் சங்கமத்தில் புனித நீராட பக்தா்கள் தொடா்ந்து வருகை தருகின்றனா்.
அதிக மக்கள் கூட்டம் காரணமாக மகா கும்பமேளா நாள்களில் பிரயாக்ராஜ் வருவதைத் தவிா்த்த பலா், இப்போது வருகின்றனா். இதைக் கருத்தில் கொண்டு சங்கமம் பகுதியில் நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட ‘எல்இடி’ விளக்குகள், உடை மாற்றும் அறைகள், படித்துறைகள் ஆகிய சில ஏற்பாடுகள் ஆண்டு முழுவதும் தக்க வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.