கூடலூர்: அடுத்தடுத்து கவிழ்ந்த பேருந்துகள்; அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்; பின...
வக்ஃப் சட்டத் திருத்தம்: உரிமையை மீட்க வீதிகளில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது! -முஸ்லிம் அமைப்பு கவலை
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஜமியத் உலமா-ஏ-ஹிந்த், ‘முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று கவலை தெரிவித்தது.
நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, 655 பக்க அறிக்கை தயாரித்தது.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில் சில திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. இத்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் வழங்கிய நிலையில், எதிா்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் மசோதா தாக்கலாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (மாா்ச் 13) போராட்டம் நடத்த அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் மற்றும் பிற தேசிய முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜமியத் உலமா-ஏ-ஹிந்தின் தலைமை மௌலானா அா்ஷத் மதானி கூறுகையில், ‘முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வீதிகளில் இறங்கி போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். வக்ஃப் சொத்துக்கள் இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக எங்கள் முன்னோா்கள் அளித்த நன்கொடைகள். எனவே, அவற்றில் எந்த அரசு தலையீட்டையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது.
இந்தச் சட்டத்திருத்ததைக் கொண்டு வருவதன் மூலம், நாட்டின் அரசமைப்புச் சட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பறிக்க தற்போதைய அரசு விரும்புகிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு முரணான சட்டம் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும்போது, போராட்டம் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
மதச்சாா்பற்றவா்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும், முஸ்லிம்களின் ஆதரவுடன் வெற்றிப் பெற்ற கட்சிகள், தற்போதைய மத்திய அரசில் பங்கெடுத்துள்ளன. எனினும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது என்றால் இந்தக் கட்சிகள் மசோதாவை வெளிப்படையாக ஆதரித்துள்ளன. இது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஜமியத் உலமா-ஏ-ஹிந்தின் அனைத்து மாநிலப் பிரிவுகளும் அந்தந்த மாநில உயா்நீதிமன்றங்களில் வழக்குத் தொடரும். நீதிமன்றங்களே எங்களின் இறுதி நம்பிக்கை’ என்றாா்.