தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது.
பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைபெற்று வரும் இந்நிகழ்வில், உலகெங்கிலும் இருந்து வந்த துறவிகள், சாதுக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என சுமார் 64 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை புனித நீராடியுள்ளனர்.
"இது உலக அளவில் எந்த மத, கலாசார அல்லது சமூக நிகழ்விலும் கூடாத மக்கள் எண்ணிக்கை' என்று மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டது.
ஹிமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு உள்ளிட்டோர் மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை புனித நீராடினர். கடந்த 45 நாள்களாக களைகட்டிய இந்த ஆன்மிக திருவிழா, சிவராத்திரி திருநாளான புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது.
சிவராத்திரி நாள் என்பதாலும் நிகழ்வின் நிறைவு நாள் என்பதாலும் புதன்கிழமை பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தூய்மைப் பணியில் "கின்னஸ்'முயற்சி: மகா கும்பமேளாவில் 15,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஒரே நேரத்தில் ஒரே மாதிரி தூய்மைப் பணியை மேற்கொண்டு, "கின்னஸ்' உலக சாதனை படைக்கும் முயற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவிலும் ஒரே நேரத்தில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே மாதிரி தூய்மைப் பணியில் ஈடுபட்டு, கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.