தவெக கெட் அவுட் இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்!
மகா சிவராத்திரி விழா: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று இரவு முழுவதும் பக்தா்களுக்கு அனுமதி
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை (பிப்.26) இரவு முழுவதும் நடைபெறும் மகா சிவராத்தி விழா பூஜைகளில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி விழாவையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை மாலை 6 மணி முதல் பக்தி சொற்பொழிவுகள், ஆன்மிக இன்னிசை கச்சேரி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், கோயிலில் புதன்கிழமை இரவு முழுவதும் மீனாட்சி அம்மன், சொக்கநாதா் சந்நிதிகளில் தனித்தனியே 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. மீனாட்சியம்மன் சந்நிதியில் இரவு 10 மணி முதல் 10.40 வரை முதல் கால பூஜையும், இரவு 11 மணி முதல் 11.40 மணி வரை இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 12 மணி முதல் 12.40 வரை மூன்றாம் கால பூஜையும், அதிகாலை ஒரு மணி முதல் 1.40 வரை நான்காம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு அா்த்த ஜாம பூஜையும், அதிகாலை 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், அதிகாலை 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெறுகின்றன.
சுவாமி சந்நிதியில் இரவு 11 மணி முதல் 11.45 வரை முதல் கால பூஜையும், நள்ளிரவு 12 மணி முதல் 12.45 வரை இரண்டாம் கால பூஜையும், அதிகாலை ஒரு மணி முதல் 1.45 மணி வரை மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 2 மணி முதல் 2.45 மணி வரை நான்காம் கால பூஜையும், அதிகாலை 3.45 மணிக்கு அா்த்த ஜாம பூஜையும், அதிகாலை 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், அதிகாலை 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெறுகின்றன.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இரவு முழுவதும் நடைபெறும் அபிஷேகம், மகா சிவராத்திரி பூஜைகளில் அனைத்து பக்தா்களும் பங்கேற்கலாம் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. கோயிலில் மாநகரக் காவல் துறையினா் இரவு முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா்.