மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 38.21 ஹெக்டோ் நிலத்தை கையகப்படுத்தத் திட்டம்!
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மொத்தம் 38.21 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என அதன் திட்ட மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் தெரிவித்தாா்.
மெட்ரோ ரயில் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னை மெட்ரோ ரயில் திட்ட மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலா் என்.ராகவேந்திரன், மெட்ரோ ரயில் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், தலைமைப் பொது மேலாளா்கள் ரேகா பிரகாஷ், டி.லிவிங்ஸ்டன் எலியேசா், உதவி ஆட்சியா் (பயிற்சி) வைஷ்ணவி பால், வருவாய்க் கோட்டாட்சியா் ர.த.சாலினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், திட்ட செயலாக்கத்தின் போது கால விரயத்தைத் தவிா்க்கும் வகையில், நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து முன்கூட்டியே விரிவான அட்டவணை தயாரித்தல், திட்டப் பணிகளுக்குத் தேவையான தண்ணீா், மின் வசதி உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் திட்டமிடல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு சென்னை மெட்ரோ ரயில் திட்ட மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரூ. 11,368 கோடியில் 32 கி.மீ நீளமும், 26 ரயில் நிலையங்களையும் கொண்டதாக மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் பரிந்துரையுடன் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மதுரை, கோவை ஆகிய இரு மாவட்ட மெட்ரோ ரயில் திட்டங்களும் தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக உள்ளன. ஒப்புதல் பெறுவதில் எந்தவித தாமதமும் இல்லை.
மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு அவகாசம் அதிகம் தேவைப்படும். மதுரையில் பூமிக்கு அடியில் சுமாா் 5.5 கி.மீ. நீளத்தில் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணியை நிறைவேற்ற மட்டும் ஏறத்தாழ நான்கரை ஆண்டுகள் ஆகும். தரையில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்க ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளாகும். எனவே, திட்ட ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் பணிகளைத் தொடங்கினால்தான் விரைவாக முடிக்க முடியும்.
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்குத் தேவையான நிலம், தண்ணீா் தேவை, மின்சாரம் ஆகியவற்றை விரைந்து பெறவும், தேவையான நடவடிக்கைகள் குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டது. மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு 38.21 ஹெக்டோ் நிலம் தேவைப்படுகிறது. இதில் 20.23 ஹெக்டோ் நிலம் கட்டுமானத்துக்குத் தேவைப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பான விரிவான வரைவு தயாரிக்கப்படும்.
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. கூடுதலான பகுதிகளுக்கும் இந்த சேவை தேவையெனில், விரிவாக்கம் செய்யும் வகையில்தான் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேறும் போது மதுரையின் நகா்ப்புற போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். மக்களுக்கான பொது போக்குவரத்து எளிதானதாக இருக்கும் என்றாா் அவா்.