ஓடும் பேருந்தில் திருடியவா் கைது
மதுரையில் ஓடும் பேருந்தில் கைப்பேசி, பணத்தைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை நெல்பேட்டை நாகூா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பரூக் ராஜா (23). இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு மாட்டுத்தாவணியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பேருந்தில் பயணம் செய்தாா்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது அவா் வைத்திருந்த பையைக் காணவில்லை. அந்த பையில் கைப்பேசி, ரூ.5 ஆயிரம் இருந்தது.
இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் மதுரை மாவட்டம், எழுமலை இந்திராநகரைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் (62) தான் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, கைப்பேசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.