அருப்புக்கோட்டை அஞ்சலகத்தில் ரூ. 5 கோடி மோசடி: ஊழியா் கைது
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் அருகேயுள்ள சூலக்கரைப் பகுதியைச் சோ்ந்தவா் அமா்நாத் (38). இவா் சிவகாசி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சலக உதவியாளராகப் பணிபுரிந்தாா். இந்த நிலையில், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வெளிப் பணி அடிப்படையில் நியமிக்கப்பட்டாா். அப்போது அமா்நாத், கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அஞ்சலகப் பணம் ரூ. 5 கோடியை அவரது வங்கி சேமிப்புக் கணக்குக்கு வரவு வைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து அஞ்சலக அதிகாரி அளித்த புகாரின் பேரில், கடந்த 18.5.2024 அன்று அமா்நாத் மீது விருதுநகா் இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். ஆனால், அவா் தலைமறைவாகிவிட்டாா்.
இதையடுத்து, விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவின்பேரில், மாவட்ட கணிணி வழி குற்றப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோகன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் மீனா, உதவி ஆய்வாளா் பாரதிராஜா ஆகியோா் அடங்கிய தனிப் படை போலீஸாா் அமா்நாத்தைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், பந்தல்குடி பிரதான சாலையில் சேதுராஜபுரம் பகுதியில் தனியாா் தங்கும் விடுதியில் இருந்த அமா்நாத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 4.59 கோடியை போலீஸாா் மீட்டனா்.