தொழிலதிபா் மா்ம மரணம்
மதுரையில் பூட்டிய அலுவலகத்தில் மா்மமாக இறந்து கிடந்த தொழிலதிபரின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (54). இவா் மாட்டுத்தாவணி பகுதியில் 3 ஜிகா்தண்டா விற்பனைக் கடைகள் நடத்தி வந்ததோடு, வீட்டடி மனை விற்பனைத் தொழிலும் செய்து வந்தாா். இதற்காக உத்தங்குடி அருகே உள்ள அம்பலக்காரன்பட்டியில் அலுவலகம் நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை ஜாகிா் உசேன் கைப்பேசிக்கு குடும்பத்தினா், நண்பா்கள் தொடா்பு கொண்டபோது அதை அவா் ஏற்கவில்லை.
இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினா் அம்பலக்காரன்பட்டியில் உள்ள அலுவலகத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்குள்ள கழிவறையில் ஜாகிா் உசேன் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மாட்டுத்தாவணி போலீஸாா் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சந்தேக மரணம் என போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.