மக்கள் அரசிடம் பிச்சையெடுக்கிறார்கள்: பாஜக அமைச்சர் பேச்சுக்கு காங். கண்டனம்!
போபால் : அரசிடம் மக்கள் பிச்சையெடுக்கிறார்கள் என்று பாஜக தலைவர் பிரஹலாத் சிங் படேல் பேசியிருப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பொது நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரின் கருத்துகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
பாரதீய ஜனதா கட்சி ஆளும் மத்திய பிரதேசத்தில், பஞ்சாயத்து மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் பிரஹலாத் சிங் படேல், ராஜ்கர் மாவட்டத்தில் சனிக்கிழமை(மார்ச் 1) நடைபெற்ற வீராங்கனா ராணி அவந்திபாய் லோதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது மேடையேறிய அவர் மக்களை நோக்கி, “அரசிடமிருந்து பிச்சையெடுக்கும் பழக்கத்தை மக்கள் வளர்த்துக் கொண்டுள்ளனர். அரசியல் தலைவர்கள் எவரேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போதெல்லாம் அவர்களிடம் பெட்டி நிறைய கோரிக்கை மனுக்கள் அளிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. தலைவர்கள் மேடையேறும்போதோ, அவர்களுக்கு மாலை அணிவித்துவிட்டு தாங்கள் கையில் எடுத்துவரும் மனுக்களையும் கொடுத்துவிடுகின்றனர். இது நல்ல பழக்கம் அல்ல.”
“ஒருவரிடமிருந்து கேட்பதற்குப் பதிலாக, கொடுக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம், மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த முடியும்; கலாச்சாரமான சமுதாயத்தை கட்டமைக்கவும் இது உதவும்.
இத்தகைய பிச்சையெடுக்கும் மக்களால் வலிமையானதொரு சமுதாயம் உருவாகாது; சமூகம் பலவீனமேயடையும். இலவசங்களை நோக்கி ஈர்க்கப்படுவது வீர மங்கையருக்கான அடையாளமல்லவே. வீர மரணமடைந்த ஒரு வீரர் எப்போது உண்மையாக மதிக்கப்படுகிறார் என்றால், அவரது மதிப்பீடுகளைப் பின்பற்றி வாழும்போதுதான்” என்றார்.
மத்திய பிரதேச அமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜீது பட்வாரி கூறியிருப்பதாவது: ”அமைச்சரின் பேச்சால் மாநில மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் அராஜகம் உச்சகட்டத்தை எட்டிவிட்டது. அதன் வெளிப்பாடாக, இப்போது அவர்கள், மக்களை பிச்சைக்காரர்கள் எனக் குறிப்பிடும் அளவுக்கு போய்விடனர். கடினமான சூழலில் கண்ணீரில் வாழும் மக்களின் நம்பிக்கையானது மேற்கண்ட அமைச்சரின் கருத்தால் அவமதிக்கப்பட்டுவிட்டது ” எனக் குறிப்பிட்டுள்ளார்.