எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
'மக்கள் அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர்' - வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை ராமநாதபுரம் பகுதியில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மாநில அரசின் அனைத்து திட்டங்களையும் அமல்படுத்துவதில் முழு ஒத்துழைப்பு தருகிறோம்.
ஆனால் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யக் கூடிய பணிகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தடையாக இருப்பது வருத்தமளிக்கிறது.
அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான எடுத்துக் காட்டாக இந்த சம்பவம் இருக்கிறது. வளர்ச்சி அடைந்த மாடல் என சொல்லும் இந்த திராவிட மாடல் ஆட்சியில் தான் அரசு மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதை தனிப்பட்ட சம்பவமாக கருத முடியாது. அரசின் தோல்வியாக தான் பார்க்க முடியும். மருத்துவ உள் கட்டமைப்பில் தலைசிறந்து விளங்குகிறோம் என கூறும் தமிழகத்தில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக நான்கு காவலர்களை இடமாற்றம் செய்து மிரட்டும் வேலையையும் தான் அரசு செய்கிறது. பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் 60 ஆண்டு கால ஆட்சியில், எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் அவர்கள் குடும்பத்தில் இருந்த முன்னாள் பிரதமர்கள் பெயரைத்தான் வைத்துக் கொண்டிருந்தார்கள். அதுதான் தமிழகத்திலும் நடக்கிறது. அதை மத்திய பாஜக அரசு பெருமளவு மாற்றியது.” என்றார்.