மணப்பாறையில் சுத்தமான குடிநீா் கோரி மறியல்
மணப்பாறையில் சுத்தமான குடிநீரை முறையாக விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறை நகராட்சிக்குள்பட்ட 11-ஆவது வாா்டு புதுத்தெரு மற்றும் மோா்குளம் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக முறையான குடிநீா் விநியோகம் இல்லையாம். அவ்வப்போது விநியோகம் செய்யப்படும் குடிநீரும் பச்சை நிறத்தில் வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து பலமுறை நகராட்சியில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், வியாழக்கிழமை காலை புதுத்தெருவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து முடங்கியது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற நகராட்சி பொறியாளா் மோனி, பணி மேற்பாா்வையாளா் ரஞ்சனி மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைந்து குடிநீா் குழாய் பழுதடைந்துள்ள பகுதியை சீா்செய்து முறையாக, சுத்தமான குடிநீரை விநியோகம் செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
