மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா? தமிழக எம்பி கேள்வி
தமிழக எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா என்று தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியுள்ள நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து மக்களவையில் எம்பிக்கள் இன்று விவாதித்தனர்.
இதையும் படிக்க : நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!
இந்த விவாதத்தில் திமுக சார்பில் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் பேசியதாவது:
”வடகிழக்கில் உள்ள 7 சகோதரிகளில் ஒரு சகோதரி ஒன்றை ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறார்கள். இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி 250க்கும் மேற்பட்டோர் எரித்து கொல்லப்பட்டுள்ளனர்.
சுமார் 60,000 பேர் சொந்த மாநிலங்களிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டு, தேவாலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 15,000 மாணவர்களின் கல்வி பறிபோகியுள்ளது.
இத்தகைய விவாதத்தின்போது, பிரதமர் அவைக்கு வரவேண்டியது அவசியம் இல்லையா? மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் பிரதமர், தன்னை செளகிதார்(பாதுகாவலர்) என்கிறார்.
உக்ரைன் பிரச்னையை தீர்த்துவைக்க முனைப்பு காட்டும் பிரதமர், சொந்த நாட்டில் உள்ள சிறிய மாநிலத்தின் பிரச்னையை தீர்க்க வலுவில்லையா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
கார்ப்ரேட் முதலாளிகளின் இல்ல நிகழ்வுக்கு விரைந்து செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல மனமில்லையா? ஏன் செல்ல மறுக்கிறார்? மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட மறுக்கிறார் என்பதை விளக்க வேண்டும்.
பாஜக அரசின் அரசியல் ஆதாயத்துக்காக குக்கி சமூக மக்களின் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளது. அதனால்தான் வன்முறையை மத்திய அரசு தீர்த்து வைக்காமல் இருக்கிறது.
குக்கி இன பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காணொலியை உலகமே பார்த்ததே, இது எந்த மாதிரியான நாகரீகம்? இதுதான் இரட்டை என்ஜின் அரசின் செயல் திறனா?
தமிழக எம்பிக்களை நாகரீகமற்றவர் என்று மத்திய அமைச்சர் கூறிகிறார். இதுதான் உங்கள் நாகரீகமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.