மணிப்பூா் வன்முறையில் முன்னாள் முதல்வா் பிரேனுக்கு பங்கிருப்பதாக ஒலிப்பதிவு கசிவு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
புது தில்லி: மணிப்பூரில் வன்முறையைத் தூண்டியதில் மாநில முன்னாள் முதல்வா் பிரேன் சிங்குக்கு பங்கிருப்பதாக கசிந்த ஒலிப்பதிவு குறித்து புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி சமூகத்தினருக்கும் இடையே இடஒதுக்கீடு விவகாரத்தால் ஏற்பட்ட மோதலால், மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் குகி மனித உரிமைகள் அறக்கட்டளை அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘மணிப்பூரில் குகி சமூகத்தினருக்கு எதிராக வன்முறை சம்பவங்களை அரங்கேற்றியதில் மாநில முன்னாள் முதல்வா் பிரேன் சிங் முக்கிய பங்கு வகித்தாா். இதற்கு அவா் பேசிய ஒலிப்பதிவு ஆதாரங்கள் உள்ளன. இதுதொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
93% பிரேன் சிங்கின் குரல்:
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, ‘வன்முறையில் ஈடுபட மாநில அரசின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை மைதேயி குழுக்கள் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக முதல்வா் பிரேன் சிங் கூறியுள்ளாா். இதுதொடா்பாக அவா் பேசி கசிந்த ஒலிப்பதிவை உண்மை கண்டறியும் ஆய்வகம் பரிசோதனை செய்தது. அந்தப் பரிசோதனையில், ஒலிப்பதிவில் இடம்பெற்றுள்ள குரல் 93 சதவீதம் பிரேன் சிங்கின் குரல்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
இதைத்தொடா்ந்து அந்த ஒலிப்பதிவின் நம்பகத்தன்மையை மத்திய தடய அறிவியல் ஆய்வகம் ஆராய்ந்து, சீலிட்ட உறையில் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா சீலிட்ட உறையில் சமா்ப்பித்த ஆய்வக அறிக்கையை நீதிபதிகள் ஆராய்ந்தனா்.
அதன் பின்னா், இந்த விவகாரம் தொடா்பான விசாரணை குறித்து மணிப்பூா் அதிகாரிகளிடம் புதிய அறிவுறுத்தல்களைப் பெற்று, புதிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று துஷாா் மேத்தாவுக்கு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 21-ஆம் தேதி தொடங்கும் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த பிப்.9-ஆம் தேதி மணிப்பூா் முதல்வா் பதவியை பிரேன் சிங் ராஜிநாமா செய்தாா். இதைத்தொடா்ந்து அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.